தீர்த்த ரெட் டொட் கலை காட்சி கூடம் (Theertha Red Dot Gallery) பெருமையுடன் வழங்கும் “தற்போது” (N.O.W) எனும் தோனிபொருளில் முற்றுமுழுதாக சிவசுப்ரமணியம் கஜேந்திரனால் (சிவா-கஜா) படைக்கப்பட்ட தனிநபர்-காண்பிய காட்சிப்படுத்தலானது எதிர்வரும் சனிக்கிழமை (06 பங்குனி 2021) மாலை 6.00 க்கு பொறள்ளையில் அமைந்துள்ள தீர்த்த ரெட் டொட் கலை காட்சி கூடத்தில் ஆரம்பமாகவுள்ளது. இக்கண்காட்சியானது 21 பங்குனி 2021 வரை மக்கள் பார்வைக்காக திறந்திருக்கும்.
முல்லை மைந்தன் சிவா-கஜா யாழ் பல்கலைக்கழகத்தில் கலை-வரலாற்றில் தன்னுடைய இளமானி பட்டத்தை பெற்றுக்கொண்டார்.
அதன் பின்னர் முதுகலைமானி பட்டத்தை பாகிஸ்தான் பல்கலைக்கழகத்தில் முதலாம்நிலை (அதிஉயர்) சித்தியுடன் பெற்றுக்கொண்ட சிவா-கஜா மீண்டும் நாடு திரும்பி தன்னுடைய கலை பயணத்தில் அயராத முயற்சியை மேற்கொண்டு வருகின்றார்.
இவர் ஏற்கனவே இரண்டு தனிநபர்-காண்பிய காட்சிப்படுத்தல்களை யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாக செய்துள்ளார். முதலாவது காண்பியலானது ‘த.வி.பு’ எனும் தலைப்பில் பல தடைகளுக்கு மத்தியில் கந்தர்மடத்தில் அவர் வசித்த வீட்டு முற்றத்தில் 2016இல் வெற்றிகரமாக அரங்கேறியது. அதன் பின்னராக ‘த.வி.ர்.பு’ எனும் தலைப்பில் தொண்டைமானாறு கடற்கரையில் ஒரு வித்தியாசமான சூழலில் காட்சிப்படுத்தப்பட்டது.
சிவா-கஜாவின் ஓவியங்களுக்கு தற்போது இலங்கையிலும் சர்வதேசத்திலும் அதிக மதிப்பும் கேள்வியும் ஏறிக்கொண்டே வருவதுடன். அவருடைய ஓவியங்கள் அண்மையில் பல இலட்சம் பெறுமதிக்கு வெளிநாட்டவர்களாலும் உள்நாட்டவர்களாலும் வாங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
சிவா-கஜாவின் யுத்த வடுக்களும் அதன் வாழ்வியல் பயணமும் மற்றும் அவை கற்று கொடுத்த படங்களும் இன்று அவர் வடித்துக்கொண்டிருக்கும் ஓவியங்கள் என்பதும் குறிப்பிட்டு சொல்லலாம்.
தற்போது “தற்போது” எனும் தலைப்பில் சிவா-கஜாவின் மூன்றாவது தனிநபர்-காண்பிய காட்சிப்படுத்தலை பற்றி வினவிய போது அவர் கூறியது ‘இந்த காண்பிய காட்சிப்படுத்தல் மூலமாக தமிழரை அடையாளப்படுத்தலும் அந்த அடையாளத்தை இக்கலை ஊடக பிரதிநிதித்துவப்படுத்தலுமே’ ஆகும் என்றார். “தற்போது” காண்பிய காட்சிப்படுத்தல் தொடர்பான விபரங்கள் கீழ் உள்ளன.
கலை காட்சி கூடம் திறக்கும் நேரங்கள்:
திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.30 – மாலை 5.00
சனிக்கிழமைகளில் காலை 11.00 – மாலை 3.00
ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் திறக்கப்படமாட்டாது.
தீர்த்த ரெட் டொட் கலை காட்சி கூடத்தின் விலாசம்: 39/4A, டி.எஸ். சேனநாயக்கே வீதி, கொழும்பு 8, இலங்கை.
மேலதிக விபரங்களுக்கு www.theertha.org


