கொவிட்19 பரவலுக்கு மத்தியில் பிற்போடப்பட்டிருந்த கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை சுகாதார விதிமுறைகளுக்கு அமைய இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது.
பரீட்சைக்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் 4,513 பரீட்சை நிலையங்களில் இடம்பெறவுள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்காக 622,352 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.
அத்துடன் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானால் அதற்காக முன் ஆயத்தமாக அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது இரண்டு மேலதிக பரீட்சை நிலையங்களை ஸ்தாபிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த பரீட்சை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில் அனைத்து பரீட்சை நிலையங்களிலும் தொற்று நீக்கும் நடவடிக்கை நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இன்று ஆரம்பமாகவுள்ள பரீட்சைக்காக கொவிட் 19 தொற்றுறுதியான 25 மாணவர்கள் தோற்றவுள்ளதுடன், அவர்களுக்காக விசேட பரீட்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
அதேநேரம் பரீட்சை ஆரம்பிப்பதற்கு 45 நிமிடங்களுக்கு முன்னர் பரீட்சை நிலையங்களுக்கு பிரவேசிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம், மாணவர்களிடம் கோரியுள்ளது.
பரீட்சை குறித்த மேலதிக தகவல்களை பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவாசன் தருகிறார்.

