தகர்ந்தது இந்திய வீரரின் ஒலிம்பிக் கனவு: 4 ஆண்டுகளுக்கு தடை!
விளையாட்டுகளுக்கான சர்வதேச நடுவர் நீதிமன்றம் இந்த பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. இதன் மூலம் ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் நர்சிங் யாதவின் கனவு தகர்க்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக்கில் ஆடவர் 74 கிலோ ப்ரீஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் பங்கேற்க இந்திய வீரர் நர்சிங் யாதவ் தகுதி பெற்றிருந்தார்.
இந்நிலையில், தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை அவர் பயன்படுத்தியதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் நர்சிங் யாதவை இடைநீக்கம் செய்து இருந்தது.
இதுகுறித்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு மையத்தின் (நாடா) ஒழுங்கு நடவடிக்கை குழு முன் நர்சிங் யாதவ் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இதனையடுத்து நர்சிங் யாதவுக்கு சாதகமாக தீர்ப்பு வெளியானதால், ரியோ ஒலிம்பிக்கில் அவர் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
ஆனால் மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ், ஊக்கமருந்து குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (வாடா), விளையாட்டுக்கான சர்வதேச நடுவர் மன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனையடுத்து நர்சிங் யாதவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் இந்த விசாரணையின் முடிவில் அவருக்கு நான்கு ஆண்டுகள் தடை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நர்சிங் யாதவின் ஒலிம்பிக் கனவு தகர்ந்துள்ளது.