தீபா கர்மாகருக்கு கேல் ரத்னா விருது!
ஒலிம்பிக் வரலாற்றில் ஜிம்னாஸ்டிக் போட்டியில், இறுதிப்போட்டிக்கு முன்னேறி புதிய வரலாறு படைத்த வீராங்கனை தீபா கர்மாகருக்கு, கேல் ரத்னா விருது வழங்கி கவுரவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
திரிபுராவை சேர்ந்த 23 வயதான தீபா கர்மாகர் ரியோ ஒலிம்பிக் போட்டியில் ‘வால்ட்’ பிரிவில் தகுதி சுற்றில் 8-வது இடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறி புதிய வரலாறு படைத்தார்.
மகளிர் வால்ட் பிரிவின் இறுதி சுற்றில், நூலிழையில் வெண்கலப்பதக்கத்தை தவறவிட்டதால் 4வது இடத்தைப் பிடித்தார். ஒலிம்பிக் பதக்க வாய்ப்பை இழந்தாலும், ஜிம்னாஸ்டிக் போட்டியில் பங்கேற்று சிறப்பாக செயல்பட்ட தீபா கர்மாகர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இந்நிலையில், தீபா கர்மாகரின் சாதனையை கவுரவிக்கும் வகையில் அவருக்கு விளையாட்டுத்துறையின் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை வழங்க மத்திய அரசு பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.