இலங்கையின் பிரதான துறைமுகமாக விளங்கும் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் பகுதியை மேம்படுத்த இந்தியாவுடன் எட்டியிருந்த ஒப்பந்தத்தை மீறி அதை தனது துறைமுகங்கள் ஆணையமே மேம்படுத்தும் என்ற திடீர் முடிவை இலங்கை எடுத்திருக்கிறது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வெளிநாட்டிற்கு விற்கவோ அல்லது குத்தகைக்கு வழங்கவோ கூடாது என கடந்த சில தினங்களாக எழுந்த கடும் எதிர்ப்பை அடுத்து, அரசாங்கம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளது.
இதன்படி, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் நடவடிக்கைகளை 100 வீதம் இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் கொண்டு வருவதற்கு அமைச்சரவை திங்கட்கிழமை (பிப்ரவரி 1) அனுமதி வழங்கியது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் கொண்டு வருமாறு கோரி, கடந்த காலங்களில் தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, துறைமுக தொழிற்சங்கங்கள் சட்டப்படி வேலை போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
இந்த முனையத்தின் முழுமையான பொறுப்பை, இலங்கை துறைமுக அதிகார சபைக்கு வழங்க வேண்டும் என்ற எழுத்துமூல கோரிக்கையை வலியுறுத்தியே இவர்கள் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
அதனைத் தொடர்ந்து, துறைமுக சேவைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலொன்றை ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தர வெளியிட்டிருந்தார்.
துறைமுக சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்ட போதிலும், துறைமுக தொழிற்சங்க ஊழியர்கள் தமது போராட்டத்தை கைவிடவில்லை.
இந்த நிலையில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநாடுகளுக்கு விற்கவோ அல்லது குத்தகைக்கோ வழங்கப்படாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்திருந்தார்.
இவ்வாறான அறிவிப்பு விடுக்கப்பட்ட பின்னணியிலும், போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.

