வவுனியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட பல பாடசாலைகளில் 20 வீதமான மாணவர்களே பாடசாலைக்கு வருகை தருவதுடன் நகர பாடசாலைகளில் 10 வீதமான மாணவர்களே வருகை தருவதாக வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் தெரிவித்தார்.
b10eaf9e 4429 45da 9771 b0036a35dd2d
வவுனியா பட்டாணிச்சூர் மற்றும் நகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் பலருக்கு கொரோனா தொற்று பீடித்துள்ளமை உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து பல்வேறு பகுதிகள் முடக்கப்பட்டதுடன், பல பாடசாலைகளின் கல்விச்செயற்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் பாடசாலைகளின் கல்விசெயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டது. எனினும் மாணவர்கள் பெரிதாக செல்லவில்லை.
இது தொடர்பாக வலயக்கல்வி பணிப்பாளரிடம் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
எமது வலயத்தில் அனைத்து பாடசாலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர் வரவு மிகவும் குறைவாக உள்ளது. இருந்தபோதும் எமது வலயத்தில் 80 வீதமான ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்கின்றனர். செட்டிகுளம் பிரதேச பாடசாலைகளில் மாணவர் வருகை 50 வீதமாக காணப்படுகின்றது. எனினும் நகரக்கோட்டத்திற்குட்பட்ட பல பாடசாலைகளில் 20 வீதமாகவே அமைந்துள்ளது.
அதிலும் நகரப்பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளில் மாணவர் வருகை 10 வீதமாகவே காணப்படுகின்றது.
இதேவேளை வெளி மாவட்டங்களிற்கு செல்லும் ஆசிரியர்களிற்கு அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

