கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழக்கும் நபர்களை அடக்கம் செய்ய அனுமதிப்பதா அல்லது தற்போதும் தொடரப்படும் தகனம் மட்டும் எனும் நிலைமையைத் தொடர்வதா என்பது தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவொன்றின் அறிக்கை சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த 9 பேர் அடங்கிய நிபுணர்கள் குழுவின் தலைவர் பேராசிரியர் ஜெனிபர் பெரேராவால் இந்த அறிக்கை கடந்த திங்கட்கிழமை மாலை சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் குறித்த அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயம் என்ன என்பதை நேற்றுமுன்தினம் மாலை வரை உறுதியாக அறிய முடியவில்லை. எவ்வாறாயினும் இந்த 9 பேர் கொண்ட குழுவின் அறிக்கை ஏகமனதான தீர்மானத்தின் அடிப்படையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
இந்த அறிக்கையின் தீர்மானம் இன்று பெரும்பாலும் வெளிப்படுத்தப்படும் என தெரிகிறது.
முன்னதாக சுகாதார அமைச்சின் நிபுணர்கள் குழு, கொவிட் தொற்றால் ஏற்படும் மரணங்களின் போது, சடலங்களை தகனம் மட்டும் செய்ய வேண்டும் என பரிந்துரை செய்திருந்தது.
அது தொடர்பில் எழுந்த பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள், எதிர்ப்புகளை அடுத்து, அடக்கம் செய்யவும் அனுமதியளிப்பதா என்பதை ஆராய இந்த 9 பேர் கொண்ட நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

