Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அப்பாவிகளைக் கொன்றமையே யுத்தக் குற்றம்- கஜேந்திரகுமார்

December 4, 2020
in News, Politics, World
0

பிரபாகரன் தப்பித்து விடுவார் என்ற காரணத்திற்காக தமிழ் மக்களை வெளியேற்ற இடமளிக்க முடியாது என மஹிந்த ராஜபக்ஷ கூறியமையும், ஒரு நபரைக் கொலைசெய்ய வேண்டும் என்பதறாக இலட்சக் கணக்கான அப்பாவி மக்களைக் கொன்றமையுமே நாம் கூறும் போர் குற்றம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இவை எதுவுமே இறுதி யுத்தத்தில் இடம்பெறவில்லை என்றால் அரசாங்கம் தைரியமாக சர்வதேச விசாரணைக்கு முகங்கொடுக்க வேண்டும் என அவர் சவால் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று அரசாங்கத்தின் 2021ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் குழுநிலை விவாதத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் உரையாற்றுகையில், “இறுதி யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர்களைச் சந்தித்துப் பேசினேன். நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோரைச் சந்தித்தேன். விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்த பொதுமக்களை மீட்க நடவடிக்கை எடுக்க அவர்கள் வலியுறுத்தினர்.

அவர்களை வெளியேற்றி அவர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தனர். அப்போதைய அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் நான் பத்து தடைவைகளுக்கும் அதிகமாக இதுகுறித்துப் பேசினேன். பொதுமக்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்துப் பேசினோம்.

கடல் மார்க்கமாக அவர்களை ஏனைய பக்கங்களுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்ட போதிலும் பாதுகாப்புக் குழுக்கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் இல்லாத காரணத்தினால் தாமதமானது.

பின்னர், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சகல பொதுமக்களையும் மீட்டுள்ளதாகவும், புலிகளின் கட்டுப்பாட்டில் எந்தவொரு பொதுமகனும் இல்லை, அனைவரையும் மீட்டுள்ளோம் எனவும் தொலைக்கட்சியில் அறிவிப்பு விடப்பட்டது. அதனைக் கேட்டு நான் அச்சப்பட்டேன்.

ஏனெனில், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட போதே நான்கு இலட்சத்து அறுபதாயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் இருந்தனர் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அரச தரப்பின் கணக்கெடுப்பு, அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளின் கணக்கெடுப்பு என அனைவரதும் எண்ணிக்கைக்கு அமைய அதிகளவில் மக்கள் இருந்திருக்க வேண்டும்.

அவ்வாறு இருக்கையில் பொதுமக்களை எப்படியேனும் வெளியேற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் எனது தொடர்புகளைப் பயன்படுத்தி, நாடாளுமன்ற உறுப்புரிமையைப் பயன்படுத்தி அரச தரப்புடன் பேசி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்தேன். ஆனால், அது நடக்கவில்லை”

உரையாற்றும்போது குறுக்கிட்டு ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய அமைச்சர் சரத் வீரகேசர, “நீங்கள் சபையை தவறாக வழிநடத்துகின்றீர்கள். மூன்று இலட்சம் மக்களை பிரபாகரன் மனிதக் கேடயமாகப் பயன்படுத்தினார். நாங்கள் அவர்களைக் காப்பாற்றினோம்” என்றார்.

இதன்பின்னர் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர் சரத் பொன்சேகா, “நாங்கள் ஒவ்வொரு தாக்குதலின் போதும் அதிகளவான பொதுமக்களைப் பாதுகாத்தோம். நீங்கள் பொய்களைக் கூறி சபையை தவறாக வழிநடத்த வேண்டாம். நாம் மக்களை மீட்ட நேரங்களில் நீங்கள் அந்தப் பகுதிகளுக்கு வரவில்லை” என்றார்.

இந்நிலையில், மீண்டும் உரையாற்றிய கஜேந்திரகுமார், “போராட்டம் தொடங்கிய வேளையில் நான்கரை இலட்சம் பொதுமக்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வாழ்ந்தனர். ஆனால், 17 ஆயிரம் பொதுமக்களே அங்கு இருந்ததாக அரசாங்கம் கூறியது. உணவு மற்றும் மருந்துகளை வெறுமனே 17 ஆயிரம் மக்களுக்கு மட்டுமே அனுப்பினார்கள். இதுதான் உண்மை. மூன்றரை இலட்சம் மக்கள் பின்னர் முகாம்களுக்கு வந்தனர்.

ஆகவே, இலக்கங்களில் அரசாங்கம் பொய்களைக் கூறிக்கொண்டுள்ளது. இறுதி யுத்தத்தில் சிக்கிய ஒன்றரை இலட்சம் மக்களுக்கு என்னவானது என்றே தெரியவில்லை. 164ஆயிரம் மக்களை அரசாங்கம் கணக்கில் எடுக்கவில்லை

54 இராணுவ அதிகாரிகளுக்கு சர்வதேச நாடுகளுக்கான வீசா வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் சபையில் கூறினார். ஏன் அவர்களுக்கு வீசா வழங்கப்படவில்லை என சிந்தித்துப்பாருங்கள். குறித்த 54 அதிகாரிகளும் அப்பாவிகள் என்றால் அதனை நிரூபிக்க வேண்டும்.

ஆனால், அவர்கள் குற்றவாளிகள். இதனால்தான் இந்த நிலைமை உருவாகியுள்ளது. நீங்கள் இந்த நிலைமைகளை நினைத்து வெட்கப்பட வேண்டும்.

இப்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், நாம் இந்த அமைச்சை இனவழிப்பு அமைச்சு, தமிழர்களுக்கு எதிராக அமைச்சு என்றே நினைக்கின்றோம். அமைச்சிற்குப் பொறுப்பான சரத் வீரசேகர சற்று முன்னர் இந்த சபையில் ஒன்றைக் கூறினார். தமிழ் தேசியக் கூட்டமைப்பை தடைசெய்ய வேண்டும் என்றார். இதனை நினைத்து வெட்கப்பட வேண்டும்.

அதேபோல், மஹிந்த சமரசிங்க அண்மையில் இதே சபையில் ஒன்றைக் கூறினார், பொதுமக்களைப் பாதுகாக்க சர்வதேச நாடுகள் வந்த வேளையில் அதனை அனுமதிக்க முடியாது என மஹிந்த ராஜபக்ஷ கூறியதாகத் தெரிவித்தார். பிரபாகரன் தப்பித்து விடுவார் என்ற காரணத்திற்காக தமிழ் மக்களை வெளியேற்ற இடமளிக்க முடியாது என்றாராம். இதுதான் போர்க் குற்றம். ஒரு நபரைக் கொலைசெய்ய வேண்டும் என்பதற்காக இலட்சக் கணக்கான அப்பாவி மக்களைக் கொன்றமையே போர்க் குற்றமாகும்.

இன்றும் நாட்டில் உள்ள பாதுகாப்பு தளங்களில் அளவுக்கு அதிகமானவை வடக்கு கிழக்கிலேயே உள்ளது, இவர்களின் எதிரிகள் தமிழர்கள் என்பதே இவர்களின் நிலைப்பாடாகும். விடுதலைப் புலிகளின் பெயரைக் கூறி தமிழர்களை இன அழிப்புச் செய்துள்ளீர்கள். தமிழர்களின் அடையாளத்தை அழிக்கும் நடவடிக்கையே முன்னெடுக்கப்பட்டது.

நேற்று தமிழர்கள், இன்று முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். இதுவே, நாளை உங்கள் இனத்திற்கு எதிராகத் திரும்பும். இதனை நன்றாக மனதில் வைத்துக்கொள்ளுங்கள். அரக்கத்தனமான ஆட்சியை நடத்தும் உங்களுக்கு நான் இதனை மீண்டும் கூறி பதிவு செய்துகொள்கிறேன். தமிழர்களைப் பாதுகாக்கும் பொறுப்பில் அரசாங்கம் தோற்றுவிட்டது. இது நாட்டின் சகல வளர்ச்சிக்கும் பாதிப்பாக அமையும்”

இதன்போது குறுக்கிட்ட சரத் வீரகேகர, “இவர் முழுமையாக பொய்களைக் கூறிகின்றார். புலம்பெயர் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில் இவர் பேசிக்கொண்டுள்ளார். நாம் பொதுமக்களைப் பாதுகாத்தோம். உலகத்தில் பொதுமக்களை மீட்ட மிகப்பெரிய நடவடிக்கையாகும். சர்வதேசமே அதனை ஏற்றுக்கொண்டது. எமது இராணுவத்திற்கு தங்கப்பதக்கம் கொடுக்க வேண்டும் எனவும், உலகிற்கே நாம் சிறந்த எடுத்துக்காட்டு என்றும் சர்வதேச நிபுணர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பிரபாகரன் முன்னிலையில் வாக்குறுதி எடுத்தவர்கள். அவர்களைத் தடுக்க வேண்டும் என்பது சரியானது” என்றார்.

இதையடுத்து உரையாற்றிய கஜேந்திரக்குமார், “நீங்கள் கூறுவதெல்லாம் உண்மையென்றால் ஏன் சர்வதேச விசாரணைக்குத் தயங்குகின்றீர்கள். நாம் இருவரும் ஒருவருக்கு ஒருவர் மோதிக்கொள்ளவதை விடவும் தைரியம் இருந்தால் சர்வதேச விசாரணைக்குச் செல்லுங்கள். ஏன் அதற்கு அஞ்சுகின்றீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இதன்போது, ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, “கஜேந்திரகுமார் எம்.பி.யின் உரையில் நாடாளுமன்றத்திற்குப் பொருத்தமில்லாத சகல கருத்துக்களையும் நீக்க வேண்டும். இவர்கள் பிணங்களை விற்று வாழ்பவர்கள். சர்வதேச டொலர்களுக்காக இவர்கள் பேசிக்கொண்டுள்ளனர்” என்றார்.

இதனையடுத்து சபையில் சிங்கள உறுப்பினர்களிடையே கடும் விமர்சனம் ஏற்பட்டதுடன் பின்வரிசையில் இருந்த சிங்கள உறுப்பினர்கள் கடும் வார்த்தைகளில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரை விமர்சித்தனர்.

Previous Post

யாழ்ப்பாணத்தில் 45ஆயிரம் பேர் பாதிப்பு

Next Post

மேலும் 476 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

Next Post

மேலும் 476 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures