தற்போதைய கொரோனா சூழ்நிலையை கருத்திற்கொண்டு மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய சிறப்பு தீர்த்தோற்சவத்திற்கு முருக பக்த அடியார்கள் ஒன்றுகூடுவதை மட்டுப்படுத்துமாறு, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் இ. ராகுலநாயகி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் புரட்டாதி 02 ஆம் திகதி தில்லை மண்டூர் முருகன் ஆலய தீர்த்த உற்சவம் நடைபெறவுள்ள நிலையில் தற்போதுள்ள கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு பொதுமக்கள் செயற்பட வேண்டிய விதம் தொடர்பாக ஊடகங்களுக்கு தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
தேசத்துக் கோயிலென்றும் சின்னக்கதிர்காமம் என்றும் போற்றப்படும், மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மண்டூர் தில்லைக் கந்தன் ஆலய திருவிழா மிக விமரிசையாக நடைபெற்று வருகின்றது. சப்பரத்திருவிழா எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 01 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. தீர்த்தோற்சவம் மறுநாள் 02ஆம் திகதி இடம்பெறவிருக்கின்றது.
இந் நிலையில் தற்பொழுது பல பாகங்களிலிருந்தும் பக்த அடியார்கள் மண்டூர் கந்தனை தரிசிப்பதற்கு திரளாக வரும் நிலையில், ஆலய வளாகத்திற்குள் தற்காலிக பந்தல் கொட்டகை அமைத்து தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பக்தர்களும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அந்த அடிப்படையில் சுகாதார நடைமுறைகளைப் பேணி சமூக இடைவெளியைப் பின்பற்றி பக்தர்கள் சகல உற்சவங்களிலும் கலந்துகொள்வதற்கு ஏற்றவாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், பக்தர்களுக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
மண்டூர் கந்தனுடைய திருவிழா என்றால் இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடி நிற்கின்ற இடமாகும். ஆகவே இந்த கொரோனா சூழ்நிலையை கருத்திற்கொண்டு பக்தர்கள் இந்த நிலைமையை அனுசரித்து செயற்பட வேண்டிய கடப்பாடு காணப்படுகின்றது.
இவ்வருட மண்டூர் ஸ்ரீ கந்தன் ஆலய திருவிழாவில் சுகாதார நடைமுறைகளை, சமூக இடைவெளியை பின்பற்றி ஆலய உற்சவங்களில் கலந்துகொள்ளுமாறு பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.சமூகத்தில் ஒவ்வொருவருடைய தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு பக்தர்களும் இந்த தடவை தீர்த்த உற்சவத்திற்கு ஒன்றுகூடி, ஆலய உற்சவத்தில் கலந்து கொள்ளாது சுகாதார ஏற்பாடுகளுக்கு ஏற்ப அனுசரித்து தங்களுடைய பிரசன்னத்தை குறைத்துக் கொள்ளுமாறு அன்பாக கேட்டுக் கொள்கின்றேன் என மேலும் தெரிவித்தார்.

