68 ஆண்டுகளுக்கு பிறகு தாயும் – மகனும் சந்தித்துக் கொண்ட நெகிழ்ச்சியான சம்பவம் வடகொரியாவில் நடந்துள்ளது.
லீ குயும் மியோம் என்ற 92 வயது பெண், 68 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொரிய போரின் போது தனது 4 வயது மகனான ஷாங் சோலை பிரிந்தார். இவருக்கு தற்போது 71 வயது. கொரியா இரண்டாக பிரிந்த போது ஆளுக்கு ஒரு பக்கம் சென்று விட்டனர். 92 வயதாகும் லீ தனது இரு மகள்களுடன் தென்கொரியாவிலும், ஷாங் சோல் வட கொரியாவிலும் வாழ்ந்து வந்தனர்.
கடந்த ஆண்டு தென்கொரியா மற்றும் வடகொரியா இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 57,000 க்கும் அதிகமானவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் மீண்டும் இணைய விண்ணப்பித்திருந்தனர். ஆனால் இவர்களில் இருந்து 89 குடும்பத்தினர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டு, குடும்பத்தினர்களுடன் சேர்த்து வைக்கப்பட்டனர். பல ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தினருடன் இணைந்த 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்களின் வயது 80 க்கும் மேல் ஆகும்.
லீ குயும் மியோம் ஆகஸ்ட் 20 ம் தேதி தனது மகன் ஷாங் சோலை ஏறக்குறைய 68 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த நிகழ்வு நடைபெற்றது. அப்போது லீ, தனது மகனை கண்டதும் கட்டி அணைத்து, கண்ணீர் விட்டார். தன்னை வளர்த்த தாய் – தந்தையின் போட்டோவை லீயிடம் காட்டிய ஷாங், அவர்கள் இறந்து விட்டதாக சோகத்துடன் தெரிவித்தார்.
நீண்ட காலத்திற்கு பிறகு மகனை சந்தித்தாலும், தனது குடும்பம் வடகொரியாவில் இருப்பதால் தான் அங்கு தான் இருக்க விரும்பியதாக கூறிய லீ, தனது மகன் நலமுடன் இருக்க பிரார்த்தனை செய்ய உள்ளதாக கூறி புறப்பட்டுச் சென்றார். இந்த நிகழ்வு அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது.