சீன சமையல் கலைஞர்கள், கையால் தயாரிக்கப்பட்ட 3 கிலோ மீட்டர் நீளமான நூடுல்ஸ் உருவாக்கி புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். சீனாவின் ஹூனான் மாகாணத்தில் உள்ள உணவு நிறுவனத்தின் சமையல் நிபுணர்கள் உலகின் மிக நீளமான நூடுல்ஸை கைகளால் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். அதன் மொத்த நீளம் 3 கி.மீ அல்லது 10 ஆயிரத்து 100 அடியாகும். 66 கிலோ எடையுள்ள இந்த நூடுல்ஸ் தயாரிக்க, 40 கிலோ ரொட்டி மாவு, 26 லிட்டர் தண்ணீர் மற்றும் 0.6 கிலோ உப்பு போன்றவை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. இதை செய்வதற்கு மொத்தம் 17 தலைசிறந்த சமையல் கலைஞர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போட்டியில் பங்கேற்ற ஒருவர், அதனை நன்றாக பிசைந்து கெட்டியான மாவாக்கினார். பின்னர் மூன்று பேர் இணைந்து மாவை சிறிய நூடுல்ஸ் அளவிற்கு உருட்டி பாத்திரத்தில் போட்டனர். இதனை சமையல் நிபுணர்கள் 17 மணி நேரத்தில் செய்து முடித்தனர். இதன் நீளத்தை கணக்கிடவே மொத்தம் 3 மணிநேரம் ஆகி இருக்கிறது. பின்னர் நூடுல்ஸ் பூண்டு, முட்டை மற்றும் தக்காளி சாஸ் ஊற்றி சமைக்கப்பட்டு 400 ஊழியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு பறிமாறப்பட்டது. இதற்கு முன்பு ஜப்பானை சேர்ந்த சமையல் கலைஞர் ஒருவர் 1800 அடியில் நூடுல்ஸ் செய்ததே இதுவரை நீளமான நூடுல்ஸாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.