அரசமைப்பின் 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுமா இல்லையா என்பது தொடர்பான குழப்பம் தோன்றியுள்ளபோதும் திருத்தம் கைவிடப்பட்டுத் தேர்தல் நடத்தப்படும் சூழல் ஏற்பட்டால் எதிர்வரும் டிசெம்பர் 9ஆம் திகதி தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது.
‘‘அரசமைப்பின் 20ஆவது திருத்தம் கைவிடப்பட்டால் கிழக்கு, வடமத்தி, சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான தேர்தல் டிசெம்பர் 9ஆம் திகதி நடத்தப்படுவதற்கு வாய்ப்பு அதிகம். அதற்குத் தேர்தல்கள் திணைக்களம் தயாராக இருக்கின்றது” இவ்வாறு மேலதிகத் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் ‘உதயன்’ பத்திரிகைக்குத் தெரிவித்தார்.
இலங்கை அரசு அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்தும் நோக்குடன் 20ஆவது திருத்தச் சட்டவரைவை முன்வைத்தது. இதற்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. உயர் நீதிமன்றம், 20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று தனது விளக்கத்தை சபாநாயகருக்கும், அரச தலைவருக்கும் அனுப்பி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து மாகாண சபைத் தேர்தல்களை நடத்தியே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு அரசு தள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தை மீண்டும் திருத்தி அதனை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் அரசு ஈடுபடுவதாகவும் கொழும்பு அரசின் தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் தேர்தலை நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டால் அதற்குத் தாம் தயாராகவே இருப்பதாகத் தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்தது. இது குறித்து மேலதிகத் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்ததாவது:
நாடாளுமன்றத்தில் 20ஆவது திருத்தச் சட்டவரைவு நிறைவேற்றப்பட்டால் மாத இறுதியில் கலைக்கப்படும் மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல் நடைபெறாது.
தேர்தல் சட்டவரைவு நிறைவேற்றப்படவில்லையாயின், எதிர்வரும் 26ஆம் திகதி சப்பிரகமுவ மாகாண சபை, 30ஆம் திகதி கிழக்கு மாகாண சபை, ஒக்ரோபர் முதலாம் திகதி வடமத்திய மாகாணசபை என்பன கலைக்கப்படும்.
1988ஆம் ஆண்டு 2ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தின் அடிப்படையில், மாகாண சபைகள் கலைக்கப்பட்டு ஒரு வார காலத்தினுள் வேட்புமனு கோரப்பட வேண்டும். 26ஆம் திகதி கலைக்கப்படும் சப்பிரகமுவ மாகாணசபைக்கு ஒக்ரோபர் 3ஆம் திகதிக்கு முன்னர் வேட்புமனு கோருதல் வேண்டும். இதற்கு அமைவாக மூன்று மாகாண சபைகளுக்கும் ஒக்ரோபர் 2ஆம் திகதி வேட்புமனு கோரப்படும்.
ஒக்ரோபர் மாதம் 16ஆம் திகதி அல்லது 23ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் வேட்புமனுத் தாக்கல் முடிவடையும். வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்ததும் மிக விரைவாக தேர்தல் தினம் குறித்த வாக்கெடுப்பு அறிவிப்பை தெரிவத்தாட்சி அலுவலர் (மாவட்டச் செயலர்) வெளியிட வேண்டும்.
வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்ததிலிருந்து, தேர்தல் திகதியானது 5 வாரத்துக்கு குறையததாகவும் 8 வாரத்துக்கு மேற்படாததாகவும், சனிக்கிழமை நடத்தக் கூடியதாகவும் இருக்கவேண்டும்.
இதனடிப்படையில் டிசெம்பர் மாதம் 2, 9, 16ஆம் திகதிகள் பொருத்தமாக உள்ளன.
டிசெம்பர் முதலாம் திகதியும், மூன்றாம் திகதியும் விடுமுறை தினமாக இருப்பதால் டிசெம்பர் 2ஆம் திகதி தேர்தலை நடத்த முடியாது.
டிசெம்பர் 16ஆம் திகதி, ஜி.சி.ஈ. சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் என்பதால் அன்றைய தினமும் தேர்தலை நடத்த முடியாது. எனவே டிசெம்பர் 9ஆம் திகதியே மூன்று மாகாண சபைகளுக்கும் தேர்தலை நடத்த முடியும் என்றார்.