ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவரான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையார், சுமார் 12 வருடங்களுக்குப் பின்னர் கட்சிக்காக மீண்டும் செயற்பாட்டு அரசியலில் களமிறங்கியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது நேற்று பல மாவட்டங்களில் வேட்புமனுத் தாக்கல் செய்தது. கம்பஹா மாவட்டத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டபோது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரும் ஆதரவாளர்களுடன் உடனிருந்தார்.
இரண்டு தடவைகள் நிறைவேற்று ஜனாதிபதி பதவியை வகித்த சந்திரிகா, அவரது காலப்பகுதியில் இடம்பெற்ற தேர்தல்களின்போது பிரதான பரப்புரைக் கூட்டங்களிலேயே பங்கேற்பார்.
எனினும், 2005ஆம் ஆண்டுக்குப் பின்னர் அதாவது, சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவி மஹிந்தவின் கைகளுக்குச் சென்ற பின்னர் கட்சியிலிருந்து சந்திரிகா படிப்படியாக ஓரங்கட்டப்பட்டார். இதனால், செயற்பாட்டு அரசியலிலிருந்து அவர் ஒதுங்கியிருந்தார்.
இந்நிலையில், 2014 நவம்பர் மாதம் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராகக் களமிறக்கி அவரின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தார். எனினும், சுதந்திரக் கட்சிக்கு அவர் ஆதரவு வழங்கவில்லை. மைத்திரிபால வெற்றிபெற்ற பின்னரே சுதந்திரக் கட்சியின் ஆலோசகர் பதவியையும் ஏற்றார்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே சுமார் 12 வருடங்களுக்குப் பின்னர் கட்சியின் வெற்றிக்காக அதுவும் வேட்புமனுத் தாக்கல் செய்யும் நிகழ்வில் அவர் பங்கேற்றுள்ளார்.
நிறைவேற்று ஜனாதிபதியாக இருந்த ஒருவர், அதுவும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக வேட்புமனுத் தாக்கல் செய்யும் நிகழ்வில் பங்கேற்றமை அரசியல் களத்தில் வித்தியாசமான கோணத்தில் பார்க்கப்படுகின்றது.
வேட்புமனுத் தாக்கலின் பின்னர் கருத்து வெளியிட்ட அவர், “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கை சின்னத்தில் போட்டியிடும். வெற்றி நிச்சயம்” என்று இடித்துரைத்தார்.

