ஹைதியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டு 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹைதி நாட்டில் வடமேற்கே கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 5.9 ஆக பதிவாகி உள்ளது. இது வடக்கு கடலோரத்தின் வடமேற்கே 12 மைல்கள் தொலைவில் 7.3 மைல்கள் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது.
தலைநகர் போர்ட் ஆப் பிரின்ஸ் லேசான அளவில் நிலநடுக்கத்தினை உணர்ந்துள்ளது. போர்ட் டி பெய்க்ஸ், கிராஸ் மோர்னி, சான்சால்ம் மற்றும் டர்டில் தீவு பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில், பிளைசான்ஸ் பகுதியிலுள்ள புனித மைக்கேல் தேவாலயமும் சேதமடைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நிலநடுக்கத்திற்கு 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் பலர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பலரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்று ஹைதி அதிபர் மோய்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். மேலும் மக்கள் மிக எச்சரிக்கையுடனும், அமைதியுடனும் இருக்க வேண்டும் என்று ஹைதி பிரதமர் சியான்ட் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.