‘காப்பான்’ படத்திற்குப் பிறகு சூர்யா நடித்து வெளிவர உள்ள படம் ‘சூரரைப் போற்று’. இப்படம் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘விஸ்வாசம்’ படத்திற்குப் பிறகு சிவா இயக்கத்தில் சூர்யா அவருடைய 39வது படத்தில் நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். ஆனால், திடீரென சிவா, ரஜினிகாந்த் நடிக்கும் 168வது படத்தை இயக்கப் போய்விட்டார். இதனால், சூர்யா அடுத்து யார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்தது. பாலா, ஹரி, வெற்றிமாறன் ஆகியோரது பெயர்கள் அடிபட்டன.
நேற்று, ‘கைதி’ படத்தின் தெலுங்கு பிரமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய கார்த்தி, அண்ணன் சூர்யா, அடுத்து ஹரி இயக்கத்தில் நடிக்கத் தயாராகி வருகிறார் என்று தெரிவித்தார்.
2017ல் வெளிவந்த ‘சிங்கம் 3’ படத்திற்குப் பிறகு ஹரி, சூர்யா கூட்டணி மீண்டும் இணையப் போகிறது. இது ‘சிங்கம் 4’ ஆக இருக்குமா அல்லது வேறு படமா என்பது விரைவில் தெரிய வரும்.