உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட கூட்டமொன்று இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் இந்த தீர்மானமிக்க கூட்டம் நடத்தப்படவுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சுதந்திரக் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமாயின், கூட்டு அரசாங்கத்தில் இருந்து சுதந்திரக் கட்சி விலக வேண்டும் என கூட்டு எதிரணி நேற்று அறிவித்திருந்த நிலையில் இன்றைய விசேட கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இக்கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கூட்டு எதிரணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கூட்டு எதிரணியின் ஒத்துழைப்பை பெறுவதற்கான ஆறு நிபந்தனைகளை உள்ளடக்கிய கடிதமொன்று சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்கவிற்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.