சட்டவிரோதமாக வனவிலங்கு வேட்டையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட வன அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.
கோவை வனக்கோட்டத்தில் வன விலங்கு வேட்டை, மணல் கடத்தல் போன்ற குற்ற நிகழ்வுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன களப்பணியாளர்களுக்கு மாவட்ட வன அலுவலர் அறிவுரை வழங்கியுள்ளார். அவ்வாறு நடவடிக்கை எடுக்கத் தவறும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். மேற்கண்ட சட்ட விரோதச் செயல்கள் குறித்து தகவல்கள் எதுவும் இருப்பின் 1800-4254-5456 என்ற டோல் ஃப்ரி எண்ணைத் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை வனச்சரகத்திற்குட்பட்ட துடியலூர் பிரிவு தடாகம் பகுதியில் வீரபாண்டியில் இருந்து மாங்கரை செல்லும் சாலையில், முயல் வேட்டையாடும் நோக்கத்தில் சுருக்கு கம்பி வைத்துக் கொண்டு இருந்த சசிகுமார், சின்னராஜ், ஆனந்தன் ஆகிய மூவரை வனத்துறை காவலர்கள் கைது செய்தனர். மேலும், அவர்கள் மூவர் மீதும் வழக்கு செய்த போலீஸார், மூவருக்கும் தலா ரூ.5000 அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.