வெள்ளை சாரி அணியத் தயாரா..? ரவிராஜ் இறப்பதற்கு முன்னர் மனைவிக்கு வந்த மிரட்டல்..! வெளியானது உண்மை
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கின் தீர்ப்பு தமக்கு முதுகில் குத்திய உணர்வை ஏற்படுத்தியுள்ளதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2006ஆம் ஆண்டு கொழும்பு நாரஹெனபிட்ட பகுதியில் வைத்து நடராஜா ரவிராஜ் மற்றும் அவரது சாரதி ஆகியோர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த கொலை வழக்கு தொடர்பில் கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் திகதி சிங்கள ஜூரிகள் நியமிக்கப்பட்டு, 23ஆம் திகதியிலிருந்து 22 நாட்கள் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில் வழக்கின் தீர்ப்பு கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் திகதி வழங்கப்பட்டது. இதன்போது குற்றம் சுமத்தப்பட்டிருந்த அனைவரும் அண்மையில் விடுதலை செய்யப்பட்டார்கள்.
குறித்த கொலை சம்பவம் இடம்பெற்று 10 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் குடும்பத்தினர் முதன் முறையாக ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.
இது குறித்து நடராஜா ரவிராஜின் மனைவி சசிகலா மற்றும் அவரது மகள் பிரவீனா ஆகியோர் தி ஹிந்துவுக்கு வழங்கியுள்ள செவ்வியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கையில் நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டதன் பின்னர், நீதி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தோம். எனினும், வழக்கின் தீர்ப்பு ஏமாற்றத்தையே தந்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
தனது தந்தையை படுகொலை செய்தவர்கள் என நம்பப்படுபவர்கள் சுதந்திரமாக வெளியில் இருப்பது, எமது முதுகில் குத்தியது போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளதாக பிரவீனா ரவிராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரித்தானியாவில் சட்டம் பயின்ற தாம், சட்டத்துறையில் தொழில் செய்ய விரும்பவில்லை. மாறாக சந்தைப்படுத்தல் துறையை தெரிவு செய்துள்ளதாகவம் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் சட்டத்துறையில் தொழில் ஒழுக்க விதிகள் பின்பற்றப்படாத காரணத்தினாலேயே தாம் இந்த துறையை தெரிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது தந்தை கொலை செய்யப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் தனது தாயாருக்கு தொலை பேசி வாயிலாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. வெள்ளை சாரி அணிய தயாரா எனவும் தனது தாயாரிடம் கேட்கப்பட்டதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் நடராஜா ரவிராஜின் மனைவி சசிகலா கருத்து தெரிவிக்கையில், தமது கணவரின் கொலைக்கு நியாயம் கிட்ட வேண்டும் என்பதே தமது நோக்கமாக இருந்தது என குறிப்பிட்டுள்ளார்.