சென்னையில் நேற்று மாலையில் இருந்து இடைவிடாமல் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை நகர் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
வீதிகள் வெள்ளக்காடாகியுள்ளதால் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், மக்களும் அவதிக்குள்ளாகியுள்ளனர். போக்குவரத்தை வழமைக்குக் கொண்டு வருவதற்கு பொலிஸார் திண்டாடியுள்ளனர்.
பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணாசாலை, காமராஜர் சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சர்தார் பட்டேல் சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகளில் மழைநீர் ஆறுபோல் ஓடியுள்ளது.
தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியதால் மின்சார ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பஸ் சேவையும் பாதிக்கப்பட்ட காரணத்தால் மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சம் புகுந்த மக்கள், அங்கிருந்து மெட்ரோ ரயில் மூலம் பயணிக்கின்றனர்.
கனமழை காரணமாக அடையாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
இதேவேளை, சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழையின் காரணமாக பல இடங்களில் வெள்ளம் தேங்கியதால் 112 இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த 2015 ஆம் ஆண்டு பெய்த கனமழை காரணமாக மக்கள் பெரும் உயிரிழப்புக்களையும், சொத்திழப்புக்களையும் சந்தித்துள்ளனர். இந்நிலையில், மீண்டும் அவ்வாறனதொரு இழப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.