இடம்பெற்று முடிந்த லங்கா பிறீமியர் லீக் தொடரில் ஜெப்னா கிங்ஸ் (Jaffna Kings) அணிக்காக விளையாடிய யாழ். வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்திற்கு பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஜெப்னா கிங்ஸ் அணியில் இளம் வீரரான வியாஸ்காந்த் சுழல்பந்து வீச்சில் 8 இன்னிங்ஸ்களில் 13 விக்கெட்டுகளை அசத்தினார். அத்துடன் சிறந்த வளர்ந்துவரும் வீரருக்கான விருதையும் வென்றிருந்தார்.
வியாஸ்காந்த் பங்களாதேஷ் பிரீமியர் லீக் அணியான Chattogram Challengers இனால் 2023 BPL க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
செட்டகிராம் செலஞ்சர்ஸ் அணியில் விஜயகாந்த் வியாஸ்காந்த் மாத்திரமின்றி இலங்கை வீரர்களான விஷ்வ பெர்னாண்டோ மற்றும் அஷான் பிரியன்ஜன் ஆகிய வீரர்களும் ஏற்கனவே இடம்பெற்றுள்ளனர். அதுமாத்திரமின்றி வியாஸ்காந்த் உட்பட மொத்தமாக 14 இலங்கை வீரர்கள் பங்களாதேஷ் பிறீமியர் லீக்கில் விளையாடவுள்ளனர்.
எல்.பி.எல். தொடரில் வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக்கொண்ட வியாஸ்காந்திற்கு வெளிநாட்டு தொடர் ஒன்றில் விளையாட கிடைக்கும் முதல் வாய்ப்பு இதுவாகும். வியாஸ்காந்திற்கு வாய்ப்பு கிடைத்துள்ளபோதும், தொடருக்கு செல்வதற்கான அனுமதி இலங்கை கிரிக்கெட் சபையிடமிருந்து இதுவரை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்து.