நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது குறித்து மூவரடங்கிய விசேட குழுவொன்று ஆராய்ந்து வருவதாகவும், இக்குழு எதிர்வரும் திங்கட்கிழமை (21) தனது இறுதித் தீர்மானத்தை முன்வைக்குமென்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
பிரதமர் தலைமையிலான இவ்விசேட குழுவை ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு நியமித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் மோசடிகளுக்கெதிரான வழக்குகள் தாமதமாவது மற்றும் தமக்கான கூட்டுப் பொறுப்புக்களை மீறி செயற்படுதல் உள்ளிட்ட காரணங்களுக்காக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியில் பலரும் யோசனைகளை முன்வைத்துள்ளனர். இவ்விடயம் தொடர்பில் மத்திய செயற்குழுவில் விரிவாக ஆராயப்பட்டபோதும் எதுவித இறுதித் தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

