அரசாங்கத்தினால் வெளியிடப்படும் வர்த்தமானி அறிவித்தல் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்தேகம் வெளியிட்டுள்ளது.
ஸர்ம வாசனா நிதியத் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.
இந்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா இவ்வாறு சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் வர்தமானி அறிவிப்பு தேசிய மட்டத்தில் ஒருமாதிரியும் வடக்கு, கிழக்கை பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கு ஒருமாதிரியாகவும் பின்பற்றப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தமிழ் மக்கள் விடயத்தில் அரசாங்கம் ஓர வஞ்சனையுடன் செயற்படுகின்றது எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘வடக்கு, கிழக்கு மாகாண அடிப்படையில் கணக்காய்வாளர்களை நியமிப்பதற்கான 2012ஆம் ஆண்டு 63 பேரை உள்வாங்குவதென தீர்மானிக்கப்பட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டது. ஆனால் 62 பேருக்கு மாத்திரமே நியமனம் வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் 2014 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி மூலம் தேசிய ரீதியில் 105 பேரை உள்வாங்குவதென தீர்மானிக்கப்பட்ட நிலையில் 273 பேர் கணக்காளர்களாக உள்வாங்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று 2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி மூலம் 202 பேரை உள்வாங்க தீர்மானிக்கப்பட்ட நிலையில் அதனை விடவும் அதிகமானவர்கள் தேசிய ரீதியில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இது வடக்கு கிழக்கு சார்ந்த விவகாரங்களில் ஓரவஞ்சனையோடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனவான என்ற சந்தேகம் பலமாக ஏற்பட்டுள்ளது’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

