வடக்கு மாகாண அமைச் சரவைக் குழப்பங்கள் இப்போதைக்கு முடிவுக்கு வராது என்பது உறுதியாகி யுள்ளது. புதிய அமைச்சர வையில் உள்ள இருவரின் பதவிகள் அந்தரத்தி லேயே தொங்கிக் கொண் டிருக்கின்றன.
சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்ட ஜி.குணசீலனுக்கு எதிராக ஒழுக் காற்று நடவடிக்கை எடுக் கப்படும் என்று ரெலோ வின் செயலாளர் ந.சிறி காந்தா அறிவித்துள்ளார். ‘‘டெனீஸ்வரனுக்கு ஒரு நீதி குணசீலனுக்கு ஒரு நீதியாக இருக்க முடி யாது’’ என்று அவர் குறிப் பிட்டுள்ளார். இரு வாரங் களுக்குள் தமது அமைப் புக் கூடி இது தொடர்பில் முடிவெடுக்கும் என்றார் அவர்.
அமைப்பு எடுத்த ஒழுக் காற்று நடவடிக்கையின் காரணமாகத்தான் அமைச் சராக இருந்த பா.டெனீஸ் வரன் பதவியிழந்தார். அவ்வாறே ஜி.குணசீலனும் பதவியிழக்க நேரிடும். அப்போது ஏற்படும் வெற்றிடத்துக்கு ரெலோ சார்பில் க.விந்தனையே நியமிக்க வேண்டிய நிலமை ஏற்படும்.
சுகாதார அமைச்சர் பதவிக்கு க.விந்தன் பொருத்தமற்றவர் என்று முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்திருக்கிறார். இந்த நிலையில் சுகாதார அமைச்சுப் பதவியை யார் பெறுவர் என்பதில் தொடர்ந்தும் சிக்கல் நீடிக்கப்படுகிறது.
வடக்கு மாகாண அமைச்சரவையை மாற்றியமைக்க வேண்டும் என்று முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்த முடிவு காரணமாக, அமைச்சராகப் பதவி வகித்துக் கொண்டிருந்த பா.டெனீஸ்வரனை, அமைச்சுப் பதவியிலிருந்து விலகுமாறு ரெலோ அமைப்புக் கோரியிருந்தது. அவர் அதற்கு மறுத்திருந்தார்.
ரெலோ அமைப்பு அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தது. கட்சியிலிருந்து இடைநிறுத்துவதாக அறிவித்தது. இந்த அறிவிப்புக் கிடைத்ததுமே முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், டெனீஸ்வரனை அமைச்சரவையில் இருந்து நீக்கினார்.
அந்த இடத்திற்கு ரெலோ அமைப்பு தமது கட்சி சார்பில் க.விந்தனை நியமிக்குமாறு கோரியது. முதலமைச்சர் அந்தக் கோரிக்கையை புறந்தள்ளி அந்தக் கட்சியைச் சேர்ந்த ஜி.குணசீலனை அமைச்சராக நியமித்தார்.
ரெலோ அமைப்பு அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அறிவித்தது. ஆனாலும் முதலமைச்சர், கட்சி பரிந்துரைக்கலாம், முதலமைச்சர்தான் முடிவெடுப்பார் என்று பதில் வழங்கியிருந்தார்.
முதலமைச்சரின் பதில் தொடர்பிலும், குணசீலனின் நடவடிக்கை தொடர்பிலும் ரெலோவின் செயலாளர் ந.சிறீகாந்தா தெரிவித்ததாவது:
சமநீதி அடிப்படையிலும் கட்சி கட்டுப்பாட்டின் அடிப்படையிலும் முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரனிற்கு ஒரு நீதி அமைச்சர் ஞா.குணசீலனுக்கு ஒரு நீதி எனச் செயல்படமுடியாது.
குணசீலனுக்கு எதிராகவும் நாம் ஒழுங்கு நடவடிக்கை எடுப்போம். எமது கட்சியினால் அமைச்சர் நியமனத்திற்கு பரிந்துரைத்த மாகாண சபை உறுப்பினருக்குப் பதிலாக வேறு ஒருவரை முதலமைச்சர் நியமித்தது பாரதூரமான அரசியல் தவறாகும்.
அது மட்டுமன்றி வெந்த புண்ணில் வேல்பாச்சுவது போல் சுகாதார அமைச்சை நிர்வகிப்பதற்கு ஓர் மருத்துவரே பொருத்தம் என்ற நிலைப்பாட்டினையும் முதலமைச்சர் முன் வைத்துள்ளார்.
எமது கட்சியானது முதலமைச்சரிடம் கோரியதெல்லாம் பதவி விலக்கப்பட்ட டெனீஸ்வரன் வசமிருந்த துறைகளை எம்மால் பரிந்துரைத்த விந்தனிடம் வழங்குங்கள் என்பதே. எந்தச் சந்தர்ப்பத்திலும் நாம் சுகாதார அமைச்சைக் கோரவில்லை.
தற்போது சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள குணசீலன் உள்பட 15 பேர் கலந்து கொட்ட எமது தலைமைக்குழுக் கூட்டத்தில் சுகாதார அமைச்சை வழங்கினால் ஏற்பதில்லை என்றும் தீர்மானித்திருந்தோம்.
முதலமைச்சர் தனது முடிவிற்கு மேலதிகமாகக் கூறும் நியாயங்கள் வேடிக்கையானது. அவற்றினை விரிவாக ஆராய விரும்பவில்லை. ஆனால் முதலமைச்சரின் முடிவின் மூலம் புதியதொரு அரசியல் புயல் மையம்கொள்வதற்கு வழி அமைக்கப்பட்டுள்ளது என்று மட்டும் கூறமுடியும்.
இந்தச் சூழலில் முதலமைச்சர் அழைத்தார் என்பதற்காக எமது உறுப்பினர் குணசீலன் ஓடோடிச் சென்று பதவி ஏற்றது கட்சியின் கட்டுப்பாட்டை அப்பட்டமாக மீறிய ஓர் பொறுப்பற்ற நடவடிக்கையாகும். குணசீலனிற்கு நடவடிக்கை எடுக்கும் நோக்கில் கட்சியின் தலமைக்குழுவானது இரண்டு வாரத்தில் கூடும் – -என்றார்.
இதற்கிடையே, எதிர்வரும் 26ஆம் திகதி வவுனியாவில் கூடுவதாக இருந்த தமிழ் அரசுக் கட்சியின் மையக் குழுக் கூட்டம் மேலும் பின்தள்ளிப் போயிருக்கிறது. அந்தக் கூட்டம் கூட்டப்படும்போது அமைச்சர் அனந்தி சசிதரனுக்கு எதிராக அந்தக் கட்சியும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும்.
தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் வடக்கு மாகாண சபையில் அமைச்சுப் பதவி எதனையும் வகிப்பதில்லை என்று எடுக்கப்பட்ட முடிவை மீறினார் என்பதற்காகவே அனந்தி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. அப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டால் கட்சியிலிருந்து அவர் நீக்கப்படவும்கூடும். அப்போது அந்த இடத்திற்கு வேறு ஒருவரை நியமிக்க வேண்டி ஏற்படும்.

