கிறிஸ்மஸ் விழா இந்த வருடம் வடக்கு மாகாணத்தில் உள்ள 52 பொலிஸ் நிலையங்களிலும் கோலாகலமாக இடம்பெறவுள்ளது என வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இலங்கையில் பொலிஸ் மற்றும் இராணுவம் இரண்டும் மிகப் பெரும்பான்மையாகச் சிங்களவர்களையே கொண்டுள்ளது. இதனால் படையினர் மற்றும் பொலிஸார் பெளத்த மதத்தின் பாதுகாவலர்களாகவே எப்போதும் இருந்து வருகின்றனர். அந்த மதத்தின் விழாக்களையே அவர்கள் முன்னுரிமை கொடுத்துக் கொண்டாடுவது வழக்கம். எனினும், இந்தமுறை கிறிஸ்மஸ் விழாவையும் வடக்கில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பெருமெடுப்பில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
“எதிர்வஇரும் 24ஆம் திகதியில் இருந்து ஜனவரி 2ஆம் திகதி வரை வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்துப் பொலிஸ் நிலையங்களிலும் கிறிஸ்மஸ் விழா கோலாகலமாக இடம்பெறவுள்ளது. பொலிஸ் நிலையங்களில் கிறிஸ்மஸ் மரங்கள் சிறப்பாக வடிவமைக்கப்படும். அந்த நாட்களில் மாலை வேளையில் பொலிஸ் நிலையங்களில் கரோல் கீதங்களும் இசைக்கப்படும். அத்தோடு 29ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை கிறிஸ்மஸ் விழா இடம்பெறும் தேவாலயங்கள்,வழிபாட்டு இடங்களுக்குத் தேவையான பொலிஸ் பாதுகாப்பும் முழுமையாக வழங்கப்படும்” என்று வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ மேலும் கூறினார்.