ராமேஸ்வரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கடல் வாழ் உயிரினமான 80 கிலோ கடல் அட்டை பறிமுதல் செய்யப்பட்டது.
கடல் வாழ் உயிரினங்களின் வாழ்விடமாக திகழும் மன்னார் வளைகுடா பகுதியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் உள்ளன. பருவ நிலை மாற்றம், முறையற்ற மீன் பிடித்தல் போன்றவற்றால் இந்த உயிரினங்கள் பெருமளவு அழியும் நிலையில் உள்ளன. இவற்றை தடுப்பதற்காக மத்திய அரசு கடல் வாழ் உயிரினங்களில் அரிய வகை உயிரினங்களைப் பிடிப்பதற்குத் தடை விதித்துள்ளது. இந்த அரிய வகை உயிரினங்களில் கடல் அட்டையும் ஒன்று.
அரசு தடை விதித்து இருந்தாலும் கடல் அட்டை மருத்துவ குணம் கொண்டிருப்பதால் இவற்றைக் கள்ளத்தனமாக பிடித்து வெளிநாடுகளுக்கு மறைமுகமாக அனுப்பி வைப்பதில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இச்செயல்களில் ஈடுபடுபவர்கள் அவ்வப்போது வன உயிரின பாதுகாவலர்களிடம் பிடிபட்டாலும், இதன்மூலம் கிடைக்கும் அதிக வருவாயைக் கருத்தில்கொண்டு கடல் அட்டை கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், ராமநாதபுரம் வன பாதுகாப்பு படையின் உதவி வன பாதுகாவலர் கணேசன், மத்திய வன உயிரின புலனாய்வுப் பிரிவு ஆய்வாளர் பிரதீப், தலைமைக் காவலர் ஆனந்த் ஆகியோர் தனுஷ்கோடி சாலையில் உள்ள தோப்பு ஒன்றை சோதனையிட்டனர். வில்லாயுதம் என்பவருக்குச் சொந்தமான அந்த தோப்பில் பதப்படுத்தப்பட்ட நிலையில், சுமார் 80 கிலோ கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர். சுமார் 4 லட்சம் மதிப்புடைய இந்த கடல் அட்டையைப் பறிமுதல் செய்த இவர்கள் மண்டபம் வன உயிரின காப்பக வன அலுவலர் சதீஷிடம் ஒப்படைத்தனர். கடல் அட்டை பதுக்கி வைத்திருந்த நபர்கள் குறித்து ராமேஸ்வரம் கோயில் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தி விசாரணை மேற்கொண்டுள்ளார்.