36 வயதினிலே படத்திற்கு பிறகு ஜோதிகா தனது அடுத்த ரவுண்டை அடித்து ஆடுகிறார். மகளிர் மட்டும், காற்றின்மொழி, நாச்சியார் என கதாநாயகியை மையமாக கொண்டு படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வரிசையில், அடுத்து அவர் நடிக்கும் படத்தை புதுமுகம் எஸ்.ராஜ் என்பவர் இயக்குகிறார். இதில் ஜோதிகாவுடன் பூர்ணிமா, சத்யன், ஹரிஷ் பெரடி, கவிதா பாரதி உள்பட பலர் நடிக்கிறார்கள். ஜோதிகா பள்ளி ஆசிரியையாக நடிக்கிறார். இதற்காக 50 லட்சம் ரூபாய் செலவில் பள்ளி ஷெட் போட்டு பெரும்பாலான படப்பிடிப்புகள் அங்கு நடந்தது. தற்போது படப்பிடிப்புகள் இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. பகலில் சாதுவான பள்ளி ஆசிரியையாகவும், இரவில் இன்னொரு முகமாவும் இருக்கிற கதை என்கிறார்கள்.
படத்தை ட்ரீம் வாரியர் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். தற்போது படத்திற்கு ராட்சஷி என்ற டைட்டில் வைக்க முடிவு செய்திருப்பதாக தயாரிப்பு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கிறது. இதுபற்றிய முறையான அறிவிப்பு இன்னும் ஒரு சில நாளில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

