ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால் பொது மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை நீக்கும் வகையில் இலங்கை போக்குவரத்துச் சபை நாடு தழுவிய ரீதியில் சேவைகளை விரிவு படுத்தியுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் ரமால் ஸ்ரீவர்தன தெரிவித்துள்ளார்.
பொதுவாக இலங்கை போக்குவரத்து சபை நாளாந்தம் 5700 பஸ்களை சேவையில் ஈடுப்படுத்துகின்றது. ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக 1000 பஸ்களை சேவையில மேலதிகமாக ஈடுபடுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாடசாலை விடுமுறை காரணமாக பாடசாலை சேவைக்காக பயன்படுத்தப்பட்ட 750 பஸ்கள் தூர இடங்களுக்கான சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதுடன் 60 சொகுசு பஸ்களும் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பஸ்களில் ரயில் பருவகால சீட்டை வைத்திருப்பவர்கள் மற்றும் முன்கூட்டியே ஆசனங்களை ஒதுக்கீடு செய்தவர்களுக்கும் எந்தவித கட்டணமும் இன்றி போக்குவரத்து வசதியை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பான விசேட சுற்றறிக்கை ஒன்று அனைத்து டிப்போக்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பருவகால சீட்டின் மூலம் பயணிப்பதை தடுக்க முயலும் பஸ் நடத்துனர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பபடும் என்றும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

