போரின்போது வடக்கில் இருந்த பாரிய , நடுத்தர மற்றும் சிறு கைத்தொழில் மையங்கள் அழிவடைந்தும் இன்றுவரை அவை மீளக் கட்டி எழுப்பப்படாதமையுமே யாழில் வேலை இல்லாப் பிரச்சினை அதிகரிப்பிற்கு காரணமாக உள்ளது என யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் வேலை வாய்ப்பு தொழில் நிலைய பணியக அங்குரார்ப்பண நிகழ்வில் வரவேற்புரையாற்றும்போதே மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் விபரம் தெரிவிக்கும் போது;
யாழ்ப்பாணக் குடாநாட்டில் 2009ற்குப் பின்பு வேலை வாய்ப்பு இன்மை ஓர் பாரிய பிரச்சினையாகவே உள்ளது. இந்தப் பிரச்சினை அதிகரித்தமைக்கு காங்கேசன்துறை சிமெந்து ஆலை, காரைநகர் சீநோர் தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, ஆனையிறவு உப்பளம் போன்ற பாரிய தொழிற்சாலைகள் போர் ஓய்ந்தும் இன்றுவரை மீளப் புனரமைக்கப்படாதமையே இவ்வாறு வேலை இல்லாப் பிரச்சினை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.
இதேபோன்று நடுத்தரத் தொழிற்சாலைகளும் பல அழிவடைந்தே கானப்படுகின்றன.இவ்வாறு வேலை வாய்ப்பு இன்றி உள்ளவர்களில் யாழ். மாவட்டச் செயலகத்தில் பதிவினை மேற்கொண்டவர்களாக 26 ஆயிரத்து 439 பேர் உள்ளனர். இதில் உயர்தர கல்வித் தகமையுடன உள்ளவர்களாக 14 ஆயிரத்து 410 பேர் உள்ளனர்.இதில் பட்டதாரிகள் மட்டும் 4 ஆயிரத்து 102 பேர் உள்ளனர்.
இதேநேரம் தொழில் வாய்ப்பைக் கோரி வரும் பட்டதாரிகள் முதல் வேலை வாய்ப்பு வழங்கினால் வீட்டுக்கு பக்கத்தில் வேலை வேண்டும் என்கின்றனர். இந்த மனதை ஒத்தவர்களே அதிகமாக கானப்படுகின்றனர். வேலை வாய்ப்பு கிடைத்தால், இலங்கையின் எப்பாகத்திலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். பிற மாவட்டங்களில் பணி செய்வதன் மூலமே வேறு பல அனுபவங்களையும் அந்த இடத்தின் தன்மைகளையும் உணர முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.