இந்தியாவில் ஒரு லட்சம் கல்வெட்டுகள் உள்ளன. அதில் தமிழகத்தில் மட்டும் 60,000 கல்வெட்டுகள் இருக்கின்றன. நாம் அனைவரும் வெளிநாட்டு மோகத்தில் இருக்கிறோம். அதனால் மோனோலிசா ஓவியத்தின் அழகைப் பற்றி பேசி வருகிறோம். அதைவிட அழகானது தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள ஓவியங்கள்” என உலக பாரம்பர்ய தின விழாவில் தொல்லியல் துறை அதிகாரி தெரிவித்தார்.
தஞ்சாவூர் பெரிய கோயிலில் இந்திய தொல்லியல் துறை சார்பில் உலக பாரம்பர்ய தினம் கொண்டாடப்பட்டது. இதில், பள்ளி மாணவர்களுக்கு பெரியகோயிலில் உள்ள கல்வெட்டுகளின் சிறப்புகளை மாணவர்கள் தெரிந்துகொள்ளும் விதமாக அதன் சிறப்புகள் குறித்தும் அதில் உள்ள எழுத்துகளைப் படித்துக்காட்டியும் எடுத்து சொல்லப்பட்டது. மேலும், பாரம்பர்ய தினம் விழிப்பு உணர்வுப் பேரணியும் நடைபெற்றது. இதில் தொல்லியல் துறையைச் சேர்ந்த பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதில் பேசிய இந்திய தொல்லியல் துறையின் சென்னை வட்ட வேதியியல் வல்லுநர் சந்திரபாண்டியன், `சோழ மண்டலத்தில் பெரிய கோயில், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில், கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய மூன்று உலக பாரம்பர்ய சின்னங்கள் அமைந்துள்ளன. இவை தமிழர்களின் கட்டடக் கலைக்கு எடுத்துகாட்டாகவும் விளங்குகின்றன. தமிழர்களின் கட்டடக்கலை சிறப்பை உலகமே வியந்து பார்க்கிறது. சிமென்ட் இல்லாமல் கற்களைக் கொண்டு இப்படி அழகு மிக்க கட்டடங்களை சோழ மன்னர்கள் எழுப்பியுள்ளார்கள். தஞ்சை பெரிய கோயிலை சுற்றி 150க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. அதேபோல் இங்கு உள்ள ஓவியங்கள் மோனோலிசா ஓவியத்தைவிட சிறந்தது. ஆனால், நாம் வெளிநாட்டு மோகத்தில் இருப்பதால் மோனோலிசா ஓவியத்தைப் பற்றி பேசி வருகிறோம். முதலில் நாம் வெளி நாட்டு மோகத்திலிருந்து மீண்டு வர வேண்டும்.நமது நாட்டில் ஒரு லட்சம் கல்வெட்டுகள் உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 60,000 கல்வெட்டுகள் இருக்கின்றன. அதிலும் மிக நீளமான கல்வெட்டுகள் தமிழகத்தில்தான் கிடைத்தன. அதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில்தான் தமிழ் பிராமி மொழி கல்வெட்டு முதன் முதலில் கிடைத்தது. அதோடு குடைவரை கோயில்கள் இங்குதான் அதிகளவில் உள்ளன.
சித்தன்னவாசல் பகுதியில் சமணர் படுக்கை உள்ளது. இப்படி பாரம்பர்யங்கள் நம்மைச் சுற்றியே உள்ளது. இதையெல்லாம் நாம் பாதுகாக்க வேண்டும். உலகப் பாரம்பர்ய சின்னங்கள் அமைந்துள்ள இடத்துக்குச் செல்லும்போது அதில் உள்ள கல்வெட்டுகளைச் சிதைக்கும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது. அவற்றைப் பாதுகாத்து வருங்கால தலைமுறையினர் காண்பதற்கு அவற்றை விட்டுச் செல்ல வேண்டும்” எனப் பேசினார்.