அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில், பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர், டிரம்ப் பங்கேற்பதை, வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.
எதிர்பார்ப்புஐக்கிய நாடுகள் சபையின், 74வது ஆண்டு கூட்டம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில், வரும், 24 முதல், 30ம் தேதி வரை நடக்கிறது. இதற்காக, 21ல் அமெரிக்காவுக்கு, பிரதமர் மோடி செல்கிறார்.
22ம் தேதி, டெக்சாஸ் மாகாணத்தில், அமெரிக்க வாழ் இந்தியர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில், மோடி பங்கேற்கிறார்.’ஹவ்டி மோடி’ என, பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில், 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில், மோடியுடன் இணைந்து, அமெரிக்க அதிபர் டிரம்பும் பங்கேற்பார் என, தகவல் வெளியானது. இதை, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை, நேற்று உறுதி செய்தது. இது தொடர்பாக, வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘செப்., 22ல், அதிபர் டிரம்ப், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகருக்கு செல்ல உள்ளார்.
அங்கு, இந்திய பிரதமர், மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். ‘ஹவ்டி மோடி’ நிகழ்ச்சி, ஒளிமயமான எதிர்காலத்தையும், கனவுகளையும் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வாக இருக்கும். இதில், ஒரு லட்சம் மக்கள் பங்கேற்பர் என, எதிர்பார்க்கிறோம்’ என, கூறப்பட்டுள்ளது.
‘காஷ்மீர் விவகாரத்தில், அமெரிக்க, எம்.பி.,க்கள் கவலை தெரிவித்துள்ள நிலையில், ‘இந்த கூட்டத்தில் டிரம்ப் பங்கேற்பது, மோடிக்கு தன் ஆதரவை வெளிப்படுத்தும் செயலாக கருதப்படுகிறது’ என, அமெரிக்க அரசியல் வல்லுனர்கள் தெரிவித்தனர்.
நெருக்கம்இது குறித்து, அமெரிக்காவுக்கான இந்திய துாதர், ஹர்ஷ் வர்தன் ஸ்ரீங்கலா கூறுகையில், ”மோடி- – டிரம்ப், ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்பது வரலாற்று சிறப்பு மிக்கது.
”இந்த சந்திப்பு, இரு நாடுகளுக்கும் இடையேயான நெருக்கம் மற்றும் சுமுகமான உறவை மட்டும் இல்லாமல், மோடி – டிரம்ப் இடையேயான நட்புணர்வையும் பிரதிபலிக்கிறது,” என்றார். ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில், 27ம் தேதி உரையாற்றும் மோடி, டிரம்பையும் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.
அப்போது, காஷ்மீர் பிரச்னை உட்பட பல பிரச்னைகள் பற்றியும், இரு தரப்பு உறவுகள் பற்றியும், இருவரும் பேசுவர் என, தெரிகிறது.