ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் கோட்டை எனக் கருதப்படுகின்ற வடமத்திய மாகாணத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான முதல் வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்துள்ளது மஹிந்த அணி.
93 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுக் காலை ஆரம்பமானது. எதிர்வரும் 14ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை வேட்புமனுக்களைத் தாக்கல்செய்ய முடியும்.
முதல் நாளான நேற்று முதலாவது வேட்புமனுவை தாமரை மொட்டு சின்னத்தில் களமிறங்கும் மஹிந்த அணியே அநுராதபுர பிரதேச செயலகத்தில் நேற்றுக் காலை தாக்கல்செய்துள்ளது.
அநுராதபுர மாவட்டத்திலுள்ள கல்நெவ பிரதேச சபையில் மஹிந்த அணியில் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரம் கையளிக்கப்பட்டுள்ளது. வடமத்திய மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் உள்ளிட்டவர்கள் இதில் பங்கேற்றிருந்தனர்.
ரஜரட்ட என சொல்லப்படுகின்ற வடமத்திய மாகாணத்தில் அநுராதபும், பொலன்னறுவை ஆகிய மாவட்டங்கள் இருக்கின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிறப்பிடமாக பொலன்னறுவை மாவட்டம் திகழ்வதால், வடமத்திய மாகாணமானது மைத்திரியின் அரசியல் கோட்டையாகவே பார்க்கப்படுகின்றது.
“உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பொது எதிரணி வெற்றிபெறும். உண்மையான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் எங்கள் பக்கம்தான் உள்ளனர். இதை உறுதிப்படுத்தும் வகையில் மக்கள் ஆணை அமையும். எனவே, சுதந்திரக் கட்சி எனக் கூறிக்கொள்பவர்கள் நேரடி மோதலுக்குத் தயாராகவேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேறினால் ஏற்றுக்கொள்ளலாம். இல்லையேல், கடும் போட்டி நிலவும்” என்று மஹிந்தவின் ஆதரவாளர்கள் வேட்புமனுத் தாக்கலின் பின்னர் முழக்கமிட்டனர்.