முல்லைத்தீவில் புதுவருட கொண்டாட்டம் ! முகில்கள் காட்டிய வடிவத்தால் மகிழ்ச்சியில் மக்கள்
முல்லைத்தீவில் 2017ஆம் ஆண்டு புதுவருடத்தை கொண்டாடுவதில் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
மேலும் முல்லைத்தீவு கடற்கரையோரங்களிலும் பொதுமக்கள் புதுவருடத்தை மிக மகிழ்ச்சியுடன் வரவேற்று நிற்கின்றனர்.
இந்நிலையில் இன்று கடற்கரை பிரதேசத்தில் இதயம் போன்ற வடிவம் வானத்தில் தோன்றியதால் மக்களிடத்தில் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
அதாவது வானில் சூரிய ஒளியில் முகில்கள் விலகிச்செல்லும் காட்சியானது பார்ப்பதற்கு இதயம் போன்றதொரு அமைப்பை தோற்றுவித்திருக்கின்றது.
இதனால் அங்கே நின்ற பொதுமக்கள் குறிப்பாக இளைஞர் யுவதிகள் பெரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
மேலும் முல்லைத்தீவு நகரப் பகுதிகளில் கிறிஸ்மஸ் தாத்தாவுடன் கூடிய குழுக்களின் நடனங்களும் கொண்டாட்டமும் பொதுமக்களின் மகிழ்ச்சிகளை மேலும் அதிகரித்துள்ளது.
2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் கருதப்படுகின்றது. இந்நிலையில் குறித்த மாவட்டத்தில் பொதுமக்களின் பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு தமது அடிப்படை பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என்று பொதுமக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.