இங்கிலாந்து அணியுடன் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் 2 ரன் வித்தியாசத்தில் தோற்றாலும், ரன்ரேட் அடிப்படையில் நியூசி. அணி முத்தரப்பு டி20 தொடரின் பைனலுக்கு தகுதி பெற்றது. செடான் பார்க் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற நியூசி.
பந்துவீசியது. இங்கிலாந்து 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 194 ரன் குவித்தது. ஜேசன் ராய் 21, மாலன் 53 ரன் (46 பந்து, 4 பவுண்டரி, 6 சிக்சர்), கேப்டன் மார்கன் ஆட்டமிழக்காமல் 80 ரன் (46 பந்து, 4 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசினர். நியூசி.
பந்துவீச்சில் போல்ட் 3, சவுத்தீ 2, கிராண்ட்ஹோம், சோதி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 192 ரன் எடுத்து 2 ரன் வித்தியசத்தில் தோற்றது. கப்தில் 62 ரன் (47 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்), கோலின் மன்றோ 57 ரன் (21 பந்து, 3 பவுண்டரி, 7 சிக்சர்), சேப்மேன் 37* ரன் (30 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினர்.
ஆஸ்திரேலியா 4 லீக் ஆட்டத்திலும் வென்று 8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த நிலையில், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து தலா 2 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்தன (1 வெற்றி, 3 தோல்வி). ரன்ரேட் அடிப்படையில் முன்னிலை வகித்த நியூசி. பைனலுக்கு முன்னேறியது. இறுதிப் போட்டி ஆக்லாந்தில் நாளை மறுநாள் நடக்கிறது.