வவுனியாவில் மாடு மேய்க்கச் சென்ற 14 வயதுச் சிறுவனை சிவில் உடையில் வந்த பொலிஸார் கடுமையாகத் தாக்கியுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
நேற்றுப் பிற்பகல் நடந்த இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிக்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியா மாவட்டம் ஓமந்தை, வேப்பங்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த சற்குணராஜா டிஷாந் மற்றும் அவருடைய சகோதரரான சற்குணராஜா தினேஸ் (வயது 08) ஆகிய இருவரும் நேற்று பிற்பகல் தமது மாடுகளை பார்ப்பதற்காக சென்றுள்ளனர். தமது வீட்டிலிருந்து சற்றுத் தூரத்தில் உள்ள அரசமுறிப்பு குளத்தடி மேய்ச்சல் தரைக்கு அவர்கள் சென்ற வேளையில் அப்பகுதிக்கு, சிவில் உடையில் ஆயுதம் தரித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட நான்கு பொலிஸாரை கொண்ட குழுவொன்று பிரசன்னமாகியிருக்கிறது.
குறித்த பொலிஸ் குழு அந்தச் சிறுவர்களைச் சுற்றிவழைத்ததோடு பிடித்து கள்ளமாடு பிடிக்க முயன்றதாக கூறி டிஷாந் என்ற சிறுவனை கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர். இத்துடன் நில்லாது, சம்மந்தப்பட்ட சிறுவனை முழங்காலில் இருத்தித் துன்புறுத்தியுள்ளதுடன், கழுத்தில் கயிறு மாட்டி மரத்தில் கட்டித் தூக்குவோம் என அச்சுறுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட சிறுவன் தெரிவித்துள்ளார்.
குறித்த சிறுவன் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்று தனது சகோதரிக்கு நடந்தவற்றைக் கூறியுள்ளதுடன் இந்த விடயம் குறித்து முறைப்பாடு செய்வதற்காக ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பொழுது அங்கிருந்த பொலிஸாரால் அவர்கள் விரட்டியடிக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இது குறித்து முறைப்பாடுகள் எதுவும் பதியவேண்டாம் என்று பொலிஸ் தரப்பிலிருந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பாக பொலிஸாருடன் இணங்கிச் செல்லுமாறு குறித்த பிரதேசத்தின் கிராம சேவையாளர் சிறுவனின் தாயாரிடம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இதேவேளை இலங்கைச் சட்டத்தின் படி பதினெட்டு வயதுக்குக் குறைவான குடிமக்கள் அனைவரும் சிறுவர்கள் என்பதும் அவர்களை உடலியல் உளவியல் ரீதியில் துன்புறுத்துவது தண்டனைக்குரிய சிறுவர் துஸ்பிரயோகம் என்பதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கதாகும்!

