Easy 24 News

மன்னிப்புக் கோரினார் பேஸ்புக் நிறுவுனர் மார்க்

உலகம் முழுவதும் முதன் முறையாக தொடர்ச்சியாக பல மணி நேரம் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டகிராம் ஆகியன முடங்கிய நிலையில் அதற்காக வாடிக்கையாளர்களிடம் பேஸ்புக் நிறுவுனர் மார்க் ஸுக்கர்பேர்க் மன்னிப்பு கோரியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

“பேஸ்புக், இஸ்டகிராம், வாட்ஸ்அப் மற்றும் மெஸன்ஜர் சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளன.தடங்கலுக்கு வருந்துகிறேன். நீங்கள் அனைவரும் நீங்கள் நேசிக்கும், உங்கள் அக்கறைக்கு பாத்திரமானவர்களுடன் தொடர்பில் இருக்க எங்களின் சேவைகளை எவ்வளவு தூரம் நம்பியிருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதேபோல், வாட்ஸ் அப் தனது சேவை முடக்கம் குறித்து டுவிட்டரில் கருத்து வெளியிட்டிருந்தது.அதில்,”வாட்ஸ் அப் சேவையைப் பயன்படுத்துவதில் சிக்கலை சந்தித்த அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறோம். நாங்கள் மிகவும் அவதானமாக வாட்ஸ் அப்பை மீண்டும் செயல்படச் செய்து வருகிறோம். தங்கள் அனைவரின் பொறுமைக்கும் நன்றி. நாங்கள் அவ்வப்போது உங்களுக்கு இது தொடர்பான பதிவேற்றங்களை தெரிவிப்போம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, உலகம் முழுவதும் உள்ள இணைய சேவைகளின் தடங்கல்கள், முடக்கம் ஆகியவற்றை கணிக்கும் டவுன்டிடக்டர் என்ற நிறுவனம் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட மிக நீண்ட முடக்கம் இதுவென்று தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் 10.6 மில்லியன் பயனர்கள் பாதிக்கப்பட்டனர். கடந்த 2019 ஆம் ஆண்டில் பேஸ்புக் சேவை முடங்கியது.எனினும், இது ஒரு மணி நேரத்தில் சரி செய்யப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் சுமார் 17 நிமிடங்கள் இந்த சேவைகள் முடங்கி மீண்டது. ஆனால், நேற்று தொடர்ச்சியாக பல மணி நேரம் ஒரே நேரத்தில், பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகியன முடங்கின.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

 

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *