மன்னார் உப்புக்குளம் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஹாட்வெயார் விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், பல இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
குறித்த விற்பனை நிலையம் நேற்று (புதன்கிழமை) இரவு வழமை போன்று மூடப்பட்டது. இந்நிலையில் இரவு 11 மணியவில் விற்பனை நிலையத்தின் உட்பகுதியில் தீ பரவல் ஏற்பட்டது.
இதனை அவதானித்த அயலவர்கள் தீயை அனைக்க நடவடிக்கை எடுத்ததோடு, மன்னார் பொலிஸ் மற்றும் நகர சபைக்கும் அறிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மன்னார் நகரசபை ஊழியர்கள் பௌசர் மூலம் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
எனினும் குறித்த விற்பனை நிலையம் முழுமையாக எரிந்துள்ளதுடன், பல இலட்சம் ரூபாய் பெறுமதியாக சொத்துக்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீ எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பாக பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் தற்போதுவரை 3இற்கும் மேற்பட்ட பாரிய தீ விபத்துக்கள் இடம்பெற்றபோதும் தீயணைப்பு வாகனம் இல்லாமையினால் தீயைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
எனவே மன்னார் மாவட்டத்திற்கு தீயணைப்பு வாகனம் ஒன்றை பெற்றுத்தர அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

