ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட 30.1 தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்ட பல விடயங்கள் இலங்கையின் அரசமைப்புக்கும் சுயாதீனத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நன்கு அறிந்தும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அதற்கு இணை அனுசரணை வழங்குவதாகத் தனது தனிப்பட்ட விருப்பத்தை அரசின் தீர்மானமாக அறிவித்தார். இதன் தாக்கம் இன்றும் தொடர்கின்றது.என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒரு தலைபட்சமானது. தமிழ் மக்களை அரசு புறக்கணிப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இல்லாத பிரச்சினைகளை இருப்பதாகக் குறிப்பிட்டுக்கொண்டு ஒரு தரப்பினர் சர்வதேச அரங்கில் இலாபமடைகிறார்கள்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை நாட்டின் சுயாதீனத்தன்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள் ஒரு தலைபட்சமான கொள்கை அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை அறியமுடிகின்றது.
2019ஆம் ஆண்டு ஆட்சியமைத்த அரசு இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்படவில்லை.
அனைத்து இன மக்களுக்கும் அனைத்து நிலைகளிலும் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. கடந்த அரசு இன நல்லிணக்கம் என்று செய்த தவறுகளைத் திருத்தும்போது அதனை இனப் புறக்கணிப்பு என்று கருதுவது தவறான நிலைப்பாடாகும்.
30 வருட கால சிவில் போர் முடிவடைந்த பிறகு அரசு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்திப் பணிகளைத் துரிதப்படுத்தியது. இறுதிக்கட்டப் போரில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டன. சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கான விசாரணை நடவடிக்கைகள் அக்காலக் கட்டத்தில் உள்ளகப் பொறிமுறை ஊடாக முன்னெடுக்கப்பட்டன – என்றார்.

