தமிழ் சினிமாவின் முக்கிய படங்களில் ஒன்று தெய்வமகன். நடிகர் திலகம் சிவாஜி நடித்த டாப்-10 படங்களில் ஒன்று. 1969ம் ஆண்டு வெளிவந்த தெய்வமகனுக்கு, இது பொன்விழா ஆண்டு. ஒரு பக்கா கமர்ஷியல் படத்தின் திரைக்கதை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதராணமாக அமைந்த படம்.
சிவாஜி, அப்பா, இரட்டை மகன்கள் என மூன்று வேடத்தில் நடித்திருப்பார். அதில் இரண்டில் அவர் அகோர முகத்துடன் நடித்திருப்பதுதான் படத்தின் ஹெலைட். அகோர முகம் கொண்ட சிவாஜிக்கும், அப்பா சிவாஜிக்கும் நடக்கும் உரையாடல் காட்சி இப்போதும் பிரபலம். இதில் அப்பா சிவாஜிக்கு பண்டரிபாய் ஜோடியாகவும், மகன் சிவாஜிக்கு ஜெயலலிதா ஜோடியாகவும் நடித்திருந்தனர். மேஜர் சுந்தர்ராஜன், எம்.என்.நம்பியார். சித்தூர் நாகய்யா முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். ஆரூர்தாஸ் வசனம் எழுதியிருந்தார். ஏசி.திருலோகசந்தர் இயக்கி இருந்தார்.
“தெய்வமே… தெய்வமே…நன்றி சொல்வேன்…”, “காதல் மலர் கூட்டம் ஒன்று…”, “காதலிக்க கற்றக் கொள்ளுங்கள்…”, “கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா…” போன்ற தேனினும் இனிய பாடல்களை கொடுத்திருந்தார் எம்.எஸ்.விஸ்வநாதன். பெரியண்ணா பிலிம்ஸ் தயாரித்த படத்தை சிவாஜியின் சாந்தி பிலிம்ஸ் வெளியிட்டது.
ஆஸ்கர் விருதுக்கு முதன் முறையாக பரிந்துரை செய்து அனுப்பி வைக்கப்பட்ட தமிழ் படம். படம் விருதை பெறாவிட்டாலும் “யார் இந்த சிவாஜி?” என்று ஆங்கிலேயர்களை கேட்க வைத்தது.

