கர்ப்பப்பையை அகற்றுவதற்காக பெண் ஒருவரின் கையொன்றை அகற்றியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன சுகாதார அமைச்சின் விசாரணைப் பிரிவுக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மாறவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவரின் கையொன்றை அகற்றியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாகவே அமைச்சர் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதேவேளை, குறித்த பெண் வேறு நோய் காரணமாக ஆபத்தான நிலைக்கு உள்ளானதையிட்டு அவர் விசேட சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிறிது நேரத்தின் பின்னர் குறித்த பெண்ணின் ஒரு கை பலவீனமடைந்ததை வைத்தியர்கள் அடையாளம் கண்டதாக மாரவில வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் நிர்மலா லோகநாதன் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் குறித்த பெண்ணின் கையின் நிறம் மாறி வருவதை வைத்தியர்கள் அடையாளங்கண்டதையடுத்து, கடந்த மாதம் 24ஆம் திகதி பாதிக்கப்பட்ட கை சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். மேலும் குறித்த நோயாளியின் உயிரை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார்.
மாதம்பே பிரதேசத்தை சேர்ந்த 78 வயதான தாய் ஒருவர் கர்ப்பப்பையை அகற்றும் சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்காக மாரவில வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார்.
கடந்த மாதம் 20ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இரு நாட்களின் பின்னர் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது அவரது கையை வெட்டி அகற்றிய வைத்தியர்கள் தற்போதும் அவரை அவசர சிகிச்சை பிரிவு அறையிலேயே வைத்துள்ளனரென்பது குறிப்பிடத்தக்கது.