பெண்களிடம் சேட்டை புரிந்த இளைஞர்கள் இருவர் நையப்புடைக்கப்பட்டுள்ளார்.
யாழில் கொக்குவில் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிம் அட்டைகள் விற்பனை செய்யும் இருவர், இளம் பெண்களுடன் சேட்டை விட்டுள்ளனர். இந்த நிலையில், இளைஞர்கள் சிலர் இணைந்து குறித்த நபர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அத்துடன், அவர்கள் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிளும் தீயிட்டு எரிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் கொக்குவில் பகுதியில் இடம்பெற்றது.
“யாழ்ப்பாணம், கலட்டிச் சந்தியில் சிம் அட்டைகள் விற்பனை செய்து கொண்டிருந்தோம். அங்கு வந்த வாள்வெட்டுக் கும்பல் ஒன்று எம்மை வாள் முனையில் கடத்திச் சென்றது.
கொக்குவில் கிழக்குப் பகுதிக்குக் கொண்டு சென்ற அந்தக் கும்பல் எம்மை வாள்களால் வெட்டிவிட்டு, எமது மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்து எரித்தது” என்று சிம் அட்டை விற்பனை செய்யும் இளைஞர்கள் இருவரும் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று முந்தினம் இரவு 7 மணிக்கு இடம்பெற்றுள்ளது எனவும், அவர்கள் தமது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் இருவரும் மானிப்பாயைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
“சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அவர்கள் இருவரும், இளம் பெண்களுக்கு விற்பனை செய்த சிம் அட்டைகளுக்கு அழைப்பு எடுத்து தொந்தரவு வழங்குபவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
பெண் பிள்ளைகளுடன் சேட்டைவிட்ட காரணத்தால்தான், இளைஞர்கள் சிலர் அவர்கள் இருவரையும் கொக்குவில் கிழக்குப் பகுதிக்கு அழைத்து தாக்கியுள்ளனர்.
அவர்களுக்கு அழைப்பை எடுத்து பெண் குரலில் கதைத்துதான் கொக்குவில் கிழக்குக்கு அழைத்துள்ளனர். பின்னர் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளுக்கும் தீவைக்கப்பட்டுள்ளது.
தம்மை வெட்டினார்கள் என்று இளைஞர்கள் இருவரும் முறைப்பாட்டில் தெரிவித்துள்ள போதும், அவர்களுக்கு அடி காயங்களே உள்ளன. அத்துடன், கலட்டிச் சந்திப் பகுதியில் நேற்றுமுந்தினம் எவருமே சிம் அட்டை விற்பனை செய்யவில்லை எனவும் தெரியவந்தது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.