நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் சூர்யா நடித்த ‘ஏழாம் அறிவு’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அதன் பின் தமிழில் ‘3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3’ என கடந்த எட்டு ஆண்டுகளில் ஆறு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக தமிழில் அவர் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. அவரது அப்பா கமல்ஹாசன் இயக்கத்தில் நடித்து வந்த ‘சபாஷ் நாயுடு’ படம் இதற்கு மேலும் தொடர வாய்ப்பில்லை. தெலுங்கிலும் இரண்டு வருடங்களாக நடிக்காமல் இருந்தார்.
இதனிடையே தமிழில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க உள்ள புதிய படத்தில் ஸ்ருதி, நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என செய்திகள் வெளிவந்தன. அது பற்றி ஸ்ருதிஹசன் தரப்பில் எதுவும் சொல்லாமல் இருந்தார்கள்.
இந்நிலையில் ஐதராபாத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்ட ஸ்ருதிஹாசன் புதிய தமிழ்ப் படத்தில் நடிப்பது உண்மைதான் என உறுதி செய்துள்ளார். மேலும், மே மாதத்திற்குப் பிறகு தெலுங்கிலும் நடிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

