ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் குழுவொன்று புரிந்துணர்வு உடன்படிக்கையின் பின்னர் அரசாங்கத்திலிருந்து வெளியேறினால், எதிர்க் கட்சியிலுள்ளவர்களை சேர்த்துக் கொண்டு புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்க பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பன கவனம் செலுத்தி வருகின்றன.
இதுதொடர்பில், எதிர்க் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் சங்கம் மற்றும் கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள எம்.பி.க்கள் சிலர் ஆகியோருடன் தற்பொழுது பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
கடந்த தேர்தலில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவது ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் பாரிய எதிர்பார்ப்பாகவுள்ளதாகவும், இதற்காக வேண்டி அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்கு அரசாங்கத்தை கொண்டு நடாத்த அவர்கள் தயாராகவுள்ளதாகவும் அப்பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வேலைத்திட்டத்தை குழப்பும் வகையில் அரசாங்கத்திலுள்ள சிலர் திடீரென அரசாங்கத்திலிருந்து பிரிந்து செல்வார்களாக இருந்தால், புதிய அரசாங்கமொன்றை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது அரசாங்கத்திலுள்ள பெரும்பான்மையானோரின் கருத்தாகவுள்ளதாகவும் அப்பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.