முஸ்லிம்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு உரிய தீர்வைக் காண்பதில் தற்போதுள்ள முஸ்லிம் கட்சிகள் பாரிய தவறுகளை இழைத்து வருவதை கருத்திற்கொண்டும், அவ்;வாறான பிரச்சினைகளுக்கு காத்திரமான முறையில் தீர்வுகாண்பதை நோக்காகக் கொண்டும் புத்திஜீவிகள், சிவில் செயற்பாட்டாளர்கள், சமுகநல சிந்தனையாளர்களை உள்ளடக்கியதாக புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்களின் அரசியல், சமூக, சிவில் விடயங்களில் நீண்டகாலமாக அக்கறையுடன் செயற்பட்டு வருகின்ற முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்ட கூட்டம் கொழும்பிலும் கிழக்கிலும் இடம்பெற்றதையடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர். குறிப்பாக, இலங்;கை முஸ்லிம்கள் தொடராக பல்வேறு நெருக்கடிகளையும் பின்னடைவுகளையும் சந்தித்து வருகின்றனர். பெருந்தேசியக் கட்சிகளில் மட்டுமே முஸ்லிம்கள் அங்கத்துவம் வகித்த காலங்களில் துருக்கித் தொப்பிக்காக போராடியது போன்று ஜனநாயக போராட்டங்களை முன்னெடுக்கவோ அல்லது பெரும்பான்மைக் கட்சிகளில் பதவிவகித்த முஸ்லிம் எம்.பி.க்கள் செய்ததைப் போன்ற தூரசிந்தை மிக்க சேவைகளையாவது இன்று தனித்துவ அடையாளத்தோடு பயணிக்கும் முஸ்லிம் கட்சிகளால் மேற்கொள்ள முடியாது போயுள்ளமை இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இணக்க அரசியல் என்ற தாரகமந்திரத்தை கடைப்பிடிக்கும் முஸ்லிம் கட்சிகளும் அரசியல்வாதிகளும் இன்று பெரும்பான்மைக் கட்சிகளின் நிகழ்ச்சிநிரல்களுடன் இணங்கிச் செல்லும் போக்கையே கடைப்பிடித்து வருகி;ன்றனர்;. அதேநேரம், சமூகத்தை ஒற்றுமைப்படு;த்துவதற்காக உருவாக்கப்பட்ட முஸ்லிம் கட்சிகள் ஒரு ஊருக்குள்ளேயே பல குழுக்களையும், இரு ஊர்களுக்கு இடையில் பிரதேசவாதத்தையும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இடையில் முரண்பாடுகளையும் ஏற்படுத்துவதன் மூலம் தமக்குள் அரசியல் இலாபம் பெற்றுக் கொள்ள பரஸ்பரம் முயற்சி செய்கின்றன என்ற விடயம் இக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
விஷேடமாக, இன்று முக்கியமான விவகாரங்களாக கருதப்படும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு, எல்லை மீள்நிர்ணயம், தேர்தல் முறை மறுசீரமைப்பு, அரசியலமைப்பு மறுசீரமைப்பு போன்ற எல்லாவற்றிலும் முஸ்லிம் தலைமைகளும் அரசியல்வாதிகளும் பொறுப்பற்ற விதத்தில் செயற்படுவதுடன் கண்கெட்ட பின் சூரியநமஸ்காரம் போல எல்லாம் நடந்த பிறகு தாம் எடுத்த தீர்மானம் பிழையென்று சொல்கின்றனர். முஸ்லிம்களின் அபிலாஷைகளை பெற்றுக் கொடுப்பதற்காக பதவி, பட்டங்கள், பணத்திற்கு அப்பால் நின்று குரல்கொடுப்பதற்கும் மாமூலான முஸ்லிம் அரசியல்கட்சிகளால் இயலாது போயுள்ளமையாலும், ஒரு அரசியல் கட்சி என்ற அடையாளத்தோடே இப்பணியை மேற்கொள்ள வேண்டியிருப்பதாலும், புதிய அரசியல் கட்சியை நிறுவ தீர்மானிக்கப்பட்டது.
இதற்கமைய ஒரு அரசியல்கட்சியை பதிவு செய்ய ஏற்கனவே பூர்வாங்க நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதுடன், எதிர்காலத்தில் பெரும்பான்மை கட்சிகளுடன் முஸ்லிம்களின் அபிலாஷைகளை முன்வைத்து பேசுவதற்கும், தேர்தல்களில் கவனம் செலுத்துவதற்கும் மேற்படி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.