தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்த நடிகை ஜெயப்பிரதா, பா.ஜ.வில் இணைந்துள்ளார். பல கட்சிகளில் இதற்கு முன் இருந்த ஜெயப்பிரதா, 1994ம் ஆண்டு முதல் முறையாக தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்ததன் மூலம் அரசியலில் நுழைந்தார். அதன்பின் அந்தக் கட்சியை விட்டு விலகி சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்தார். அங்கிருந்து 2010ல் விலகி, ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியில் இணைந்தார்.
2014ல் நடைபெற்ற பார்லிமென்ட் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிஜ்னோர் தொகுதியில் அந்தக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜெயப்பிரதா நான்காம் இடம் பிடித்து தோல்வியடைந்தார்.
இந்நிலையில், அவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். வரும் தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதியில் அவர் பாஜக சார்பில் போட்டியிடுவார் என்றும் தெரிகிறது. அந்தத் தொகுதியில் சமாஜ்வாடி சார்பில் 2004 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னிந்தியத் திரையுலகத்தில் இருந்து கர்நாடகாவில் சுமலதா, பிரகாஷ் ராஜ் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் மேலும் ஒரு தென்னிந்திய நடிகையான ஜெயப்பிரதா தேர்தல் களத்தில் குதிக்க உள்ளார்.

