பாகிஸ்தானில் 100 கோடி டாலர் அளவுக்கு வளர்ச்சித் திட்டங்களில் முதலீடு செய்ய திட்டமிட்டிருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானுக்கான சீன தூதர் யவோ ஜிங், இஸ்லாமாபாத் வணிகம் மற்றும் தொழிற்துறை பெண்கள் சம்மேளனத்தில் உரையாற்றினார்.
அப்போது, பாகிஸ்தானின் வளர்ச்சித் திட்டங்களில் 100 கோடி டாலர் அதாவது 7 ஆயிரத்து 164 கோடி ரூபாய் முதலீடு செய்ய சீனா திட்டமிட்டிருக்கிறது என்று அவர் கூறியதாக எக்ஸ்பிரஸ் டிரிபியூன் என்ற பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபெக் பொருளாதார வழித்தடப் பணிகள் திருப்திகரமாக உள்ளதாகவும், சீனா-பாகிஸ்தான் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அக்டோபரில் இறுதி செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். அதன் பின் பாகிஸ்தானின் வேளாண் மற்றும் கடல் உணவுகளின் 90 சதவீத ஏற்றுமதிக்கு வரி ஏதும் விதிக்கப்படாது எனவும் பாகிஸ்தானுக்கான சீன தூதர் தெரிவித்தார்.
இந்த சுதந்திர சந்தைப் பயன்பாடு பாகிஸ்தான் ஏற்றுமதியை 500 மில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்தும் என்றும், இரு நாடுகளிடையே உள்ள வர்த்தக வேறுபாட்டைக் குறைக்கும் என்றும் கூறினார். மேலும் இருநாட்டு பெண் தொழில் முனைவோர்களும் பரஸ்பரம் தொழில் கண்காட்சிகளில் பங்கேற்று முதலீடுகளை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

