சப்புகஸ்கந்தை பகுதியில் பயணப் பையொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண், மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பைச் சேர்ந்த 42 வயதானவர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு செல்லும் வீதிக்கு அருகே, குப்பைகள் கொட்டப்பட்டிருந்த இடமொன்றில், கைவிடப்பட்டிருந்த பயணப் பையிலிருந்து பெண் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டது.
சப்புகஸ்கந்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாபிம பகுதியை அண்மித்து, எண்னெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு செல்லும் வீதியிக்கு அருகே குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன.
கடந்த இரு நாட்களாக அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வந்த நிலையில், அது தொடர்பில் சப்புகஸ்கந்த பொலிஸ் நிலைய சமூக பொலிஸ் பிரிவுக்கு பலரும் முறையிட்டுள்ளனர்.
இதனையடுத்தே நேற்று நண்பகல் அப்பகுதிக்கு பொலிஸார் சென்று நிலைமையை ஆராய்ந்துள்ளனர்.
இதன்போது அந்த குப்பை கொட்டப்பட்டிருந்த பகுதியில், சந்தேகத்துக்கு இடமான முறையில், பயணப் பை ஒன்று, பிளாஸ்டிக் பாய் ஒன்றினால் சுற்றப்பட்டு அவ்விடத்தில் கைவிடப்பட்டிருந்துள்ளமையும் அதிலிருந்து துர்வாடை வீசுவதும் பொலிஸாரால் கண்டறியப்பட்ட நிலையில், அந்த பயணப் பை சோதனை செய்யப்பட்டுள்ளது.
இதன்போதே குறித்த பைக்குள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், சிவப்பு சட்டை ( கவுன்) அணிந்த பெண் ஒருவரின் சடலம் காணப்பட்டுள்ளது.
சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டுள்ளதுடன் உடனடியாக சடலத்தை பொலிசாரால் அடையாளம் காண முடியவில்லை.
இந்நிலையில் நேற்று மாலை அந்த பகுதிக்கு மஹர பதில் நீதிவான் ரமனி சிறிவர்தன வருகை தந்து சடலத்தை பார்வையிட்ட நிலையில், பிரேத பரிசோதனைக்காக சடலத்தை ராகம வைத்தியசலைக்கு அனுப்ப உத்தரவிட்டார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் களனி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் ஆலோசனைக்கு அமைய, சப்புகஸ்கந்த பொலிஸாரும், களனி வலய குற்றத் தடுப்புப் பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
இதையடுத்து, சப்புகஸ்கந்தயில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை கண்டறிய உதவுமாறு காணாமல் போன பெண்கள் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளவர்களின் உதவியை காவல்துறையினர் நாடியிருந்தனர்.
இதற்கமைய இன்றையதினம் ராகம வைத்தியசாலையின் பிரேத அறைக்கு சென்ற குறித்த பெண்ணின் கணவர் சடலத்தை அடையாளம் காண்பித்துள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]