தென் கொரியாவில், மீன்பிடி படகு, எண்ணெய் டாங்கர் ஏற்றிச்சென்ற கப்பல் மீது மோதி நிகழ்ந்த விபத்தில், 13 பேர் உயிரிழந்தனர்.
கிழக்காசிய நாடுகளில் ஒன்றான தென் கொரியாவில், இன்சியான் துறைமுகம் அருகே, 20 பயணியரை, மீன்பிடி படகு ஒன்று, மீன்பிடி சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றது. அப்போது, 336 டன் எரிபொருள் டாங்கருடன் சென்ற கப்பல் மீது, மீன்பிடி படகு வேகமாக மோதியது; இதில், படகு நொறுங்கி, கடலில் மூழ்கியது.
இந்த விபத்தில், 13 பேர் உயிரிழந்தனர். படகின் கேப்டன் உட்பட இருவரை காணவில்லை; மற்றவர்கள் மீட்கப்பட்டனர்.
தென் கொரியாவில் மீன்பிடி படகுகள், விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.
2015ல், ஜெஜு தீவு அருகே, மீன்பிடி சுற்றுலா படகு கவிழ்ந்ததில், 15 பேர் உயிரிழந்தனர். அதன் பின், தற்போது, மிக மோசமான விபத்து நடந்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.