சென்னை பிளே ஆஃப் வரக் காரணம் என்ன? வாட்சன் – ராயுடு சூப்பர் ஓப்பனிங், தோனியின் அதிரடி, தீபக் சஹார் சூப்பர் பௌலிங்…
சன்ரைசர்ஸ்..? வில்லியம்சனின் ஆசம் பேட்டிங், ஆல்ரவுண்டர் ஷகிப், புவி – ரஷித் – கௌல் கொண்ட வெறித்தன பௌலிங் யூனிட்..
கொல்கத்தா..? நரைனின் சுழல் + காட்டுச்சுத்து, டி.கே-வின் கூல் பேட்டிங், ரஸ்ஸல்
ராஜஸ்தான்..? பட்லர், பட்லர், பட்லர்!
மொத்தமாகக் காலியாகியிருந்த அணியைக் கரைசேர்த்த அந்த ஒற்றை ஆளும் இல்லாமல், நைட் ரைடர்ஸை அதன் சொந்த மண்ணில் எலிமினேட்டரில் எதிர்கொள்ளவிருக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ். இந்தப் போட்டியில் வென்று இறுதிப் போட்டியை நெருங்கப் போவது யார்? தோற்று, தொடரிலிருந்து வெளியேறப்போவது யார்? #KKRvRR
டி.கே vs ரஹானே: வித்தியாச அணுகுமுறை
இரு அணிகளின் கேப்டன்களின் அணுகுமுறையிலும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. தன் அணியின் பேட்டிங் ஆர்டர் இதுதான் என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறார் தினேஷ் கார்த்திக். நரைன் அடிக்கும் ஒவ்வொரு பௌண்டரியும் அணிக்கு போனஸ் என்பதால், கம்பீர் செய்த மாற்றத்தில் கைவைக்காமல் தானும் அதைத் தொடர்ந்தே வருகிறார். ஆனால், ரஹானே அடிக்கடி ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பை மாற்றிக்கொண்டே இருக்க, ராஜஸ்தான் அணிக்கு இன்று வரை ஒரு நிலையான தொடக்க ஜோடி இல்லை. ஐ.பி.எல் தொடரில் ஓப்பனிங்கில் இறங்கியபோதுதான் அவர் சிறப்பாகச் செயல்பட்டார். ஆனால், ரோஹித் ஷர்மாவைப் போல் கேப்டன் பதவி வந்ததிலிருந்து இவரும் ஓப்பனிங் இறங்கத் தயங்குகிறார்.
ராகுல் திரிபாதியையும் சில போட்டிகளுக்குப் பிறகே அந்த இடத்தில் இறக்கினார். ஒரு போட்டியில் பென் ஸ்டோக்ஸ், ஒரு போட்டியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் என ஆட்டத்துக்கு ஆட்டம் `அன்பிரெடிக்டபிள்’ அஷ்வினாக மாறிக்கொண்டிருக்கிறார் அஜிங்க்யா! தொடர்ந்து 5 போட்டிகளில் அரைசதம் அடித்த பட்லர் இல்லை.. தங்கள் அணியைக் கரைசேர்த்த ஓப்பனிங் ஸ்லாட்டில் ஓட்டை… இதுபோன்ற முக்கியமான தருணத்தில் அங்கு பரிசோதனை முயற்சிகள் செய்து பார்ப்பது நல்லதல்ல. அதை ரஹானே உணர்ந்துகொள்ளவேண்டும். திரிபாதி உடன் அவரே ஓப்பனிங் இறங்குவதுதான் சரியான முடிவாக இருக்கும். வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமான ஈடன் ஆடுகளத்தில் அவரது அணுகுமுறை அணிக்குக் கைகொடுக்கலாம்.