நூறு வாகனங்கள் விபத்தில் சிக்கின
கனடாவில் ஒன்றாரியோ மாநிலத்தில் 401 என்ற இலக்கமிடப்பட்ட நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வாகன விபத்தில் சுமார் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
இந்த விபத்து கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ள போதும் அது தொடர்பான காணொளி தற்போது வெளியிடப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, குறித்த விபத்தில் சில உயிரிழப்புக்கள் நேர்ந்ததாக உள்ளூர் ஊடகங்கள் அறிக்கையிட்ட போதிலும், அவை தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.
நெடுஞ்சாலை வழியாக பயணித்துக் கொண்டிருந்த சரக்கு லொறி ஒன்று கிரேட்டர் டொரன்டோ பகுதிக்கு அருகாமையில் வைத்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானதில் தொடர்ச்சியாக பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளன.
இதனால் குறித்த பகுதி வழமைக்கு மாறான ஒரு தோற்றப்பாட்டை வெளிப்படுத்தியதாகவும், குறித்த வாகனங்களில் இருந்தவர்கள் பெரும் அசௌகரியத்தை அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறான போதும், சேதமடைந்த வாகனங்களை அப்புறப்படுத்தும் பணிகள் மற்றும் காயமடைந்தவர்களை வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லும் பணிகள் என்பன துரிதமாக முன்னெடுக்கப்பட்டு நிலைமை சீர்செய்யப்பட்டுள்ளது.