முல்லைத்தீவு மாவட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தீர்மானத்தின் கீழ் கோரப்பட்ட நிலங்களினை விடுவிக்கவும் வனவளத் திணைக்களம் மறுத்துவிட்டதாக மாவட்டச் செயலாளர் திருமதி.ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.
மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் இரு தடவைகள் மேச்சல்த் தறைக்காக நிலங களை விடுவிக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முன்னேற்றம் தொடர்பில் கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மாவட்டச் செயலாளர் மேலும் விபரம் தெரவிக்கையில் ,
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்ப்போரின் நன்மைகருதி பிரதேச செயலக ரீதியில் மேய்ச்சல் தறைகளிற்காக பல நிலங்கள் கோரப்பட்டன. இதற்காக எம்மால் இனம்கானப்பட்ட நிலங்களின் விபரங்களை அடையாளப்படுத்தி அதன் எல்லைப் பரப்புக்களின் குறியீட்டுடன் ஆவணங்களை தயார் செய்து உரிய திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அவ்வாறு எம்மால் அனுப்பி வைக்கப்பட்ட நிலங்களை மாவட்டச் செயலகத்திற்கு விடுவிக்குமாறும் அவ்வாறு விடுவிக்கப்படும் நிலங்கள் பொதுப்பயன்பாட்டின் கீழ் மேச்சல்த் தறைக்காகவே ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு மாவட்டச் செயலகத்தினால் கோரப்பட்ட நிலங்கள் அனைத்தும் வனப்பிரதேசமாக இருப்பதனால் அவற்றினை வழங்க முடியாது எனத் தற்போது வனவளத் திணைக்களத்தினர் பதிலளித்துள்ளனர்.
இதன் காரணமாக குறித்த பிரச்சணைக்கான தீர்வாக நிலங்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் குறித்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினை நாடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். எனத் தெரிவித்தார்.